1உம்முடைய அழியா ஆவி

எல்லாவற்றிலும் உள்ளது.

2ஆகையால், தவறு செய்பவர்களைச்

சிறிது சிறிதாய்ச் திருத்துகின்றீர்;

அவர்கள் எவற்றால் பாவம்

செய்கிறார்களோ

அவற்றை நினைவுபடுத்தி

அவர்களை எச்சரிக்கின்றீர்;

ஆண்டவரே,

அவர்கள் தீமையிலிருந்து விடுபடவும்

உம்மேல் நம்பிக்கை கொள்ளவுமே

இவ்வாறு செய்கின்றீர்.

3உமது திருநாட்டில்

பண்டுதொட்டே வாழ்ந்து

வந்தோரின்

4அருவருப்புக்குரிய நடத்தை,

மந்திரவாதச் செயல்கள்,

நெறிகெட்ட வழிபாட்டுமுறைகள்

ஆகியவற்றுக்காக அவர்களை

வெறுத்தீர்.

5இரக்கமின்றிக்

குழந்தைகளைக் கொலைசெய்தோர்,

மனித சதையையும் குருதியையும்

பலிவிருந்தாக உண்டோர்.

வேற்றின வழிபாட்டுச் சடங்குகளில்

புகுமுகம் செய்யப்பட்டோர்.

6தற்காப்பற்ற தங்கள் பிள்ளைகளைக்

கொலைசெய்த பெற்றோர் ஆகியோரை

எங்கள் மூதாதையரின் கைகளால்

அழிக்கத் திருவுளங்கொண்டீர்.

7நாடுகளிலெல்லாம்

நீர் மிகுதியாக மதிக்கின்ற நாடு

கடவுளின் மக்கள் குடியேறுவதற்குத்

தகுதியாகும்படி இவ்வாறு செய்தீர்.

8இருப்பினும்,

அவர்களும் மனிதர்களே என்பதால்

அவர்களை விட்டு வைத்தீர்;

உம் படைகளின் முன்னோடிகளாக

மலைக்குளவிகளை அனுப்பி வைத்தீர்;

இவ்வாறு அவர்களைச்

சிறிது சிறிதாக அழித்தீர்.

9ஏனெனில்

இறைப்பற்றில்லாதவர்களைப்

போர்க்களத்தில் நீதிமான்களின்

கையில் ஒப்படைப்பதும்,

கொடிய காட்டு விலங்குகளாலோ,

ஒரு கடுஞ்சொல்லாலோ

ஒரே நொடியில் அழிப்பதும்

உம்மால் இயலாத செயலன்று.

10அவர்கள்

தீய தலைமுறையினர் என்பதும்,

தீமை அவர்களது இயல்போடு

இணைந்துவிட்டது என்பதும்,

அவர்களது சிந்தனை முறை

ஒருபோதும் மாறாது என்பதும்

உமக்குத் தெரியாதனவல்ல.

இருப்பினும் நீர் அவர்களைச்

சிறிதுசிறிதாய்த் தண்டித்து,

மனந்திரும்ப அவர்களுக்கு

வாய்ப்புக் கொடுத்தீர்.

11அவர்கள் ஆதிமுதலே சாபத்துக்கு

உட்பட்ட வழிமரபினர்.

அவர்களுடைய பாவங்களை நீர்

தண்டியாமல் விட்டீர்.

எவருக்கும் அஞ்சி நீர்

அவ்வாறு செயல்படவில்லை.

12“நீர் என்ன செய்தீர்?”

என்று கேட்பவர் யார்?

உமது நீதித்தீர்ப்பை எதிர்ப்பவர் யார்?

நீர் உண்டாக்கிய மக்களினத்தாரின்

அழிவுபற்றி உம்மீது குற்றம்

சுமத்துபவர் யார்?

நீதியற்றோரை நீர் பழிவாங்கும்போது,

அவர்கள் சார்பாக உம் திருமுன்

பரிந்துரைப்பவர் யார்?

13ஏனெனில் உம்மைத் தவிர

வேறு கடவுள் இல்லை.

எல்லாவற்றின்மீதும்

நீர் கருத்தாய் இருக்கிறீர்.

முறைகேடாக நீர்

தீர்ப்பு வழங்குவதில்லை

என்பதை யாரிடம் காட்டவேண்டும்?

14நீர் தண்டித்தவர்கள் சார்பாக

உம்மை எதிர்த்து நிற்க

எந்த மன்னராலும் தலைவராலும்

முடியாது.

15நீர் நேர்மையுள்ளவர்;

அனைத்தையும் நீதியோடு

ஆண்டுவருகின்றீர்.

தண்டிக்கத்தகாதவர்களைத்

தண்டிப்பது

உமது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது

என நீர் அறிவீர்.

16உமது ஆற்றலே நீதியின் ஊற்று.

அனைத்தின்மீதும்

உமக்குள்ள ஆட்சியுரிமை

அனைத்தையும் வாழும்படி

விட்டு வைக்கிறது.

17மனிதர்கள் உமது

வலிமையின் நிறைவை

ஐயுறும்போது

நீர் உம்முடைய ஆற்றலைக்

காட்டுகிறீர்;

அதை அறிந்திருந்தும்

செருக்குற்றிருப்போரை அடக்குகிறீர்.

18நீர் ஆற்றல் மிக்கவராய் இருப்பதால்

கனிவோடு தீர்ப்பு வழங்குகிறீர்;

மிகுந்த பொறுமையோடு

எங்களை ஆள்கிறீர்.

ஏனெனில் நீர் விரும்பும்போதெல்லாம்

செயல்புரிய உமக்கு வலிமை உண்டு.

19நீதிமான்கள்

மனிதநேயம் கொண்டவர்களாக

இருக்கவேண்டும் என்பதை

இச்செயல்கள் வாயிலாக

உம் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தீர்;

உம் மக்களை

நன்னம்பிக்கையால் நிரப்பினீர்;

ஏனெனில் பாவங்களிலிருந்து

மனமாற்றம் அருள்கிறீர்.

20உம் ஊழியர்களின் பகைவர்கள்

சாவுக்குரியவர்களாய் இருந்தும்,

மிகுந்த கனிவோடும் இரக்கத்தோடும்

அவர்களைத் தண்டித்தீர்;

அவர்கள் தங்கள் தீச்செயல்களை

விட்டுவிடும் பொருட்டு,

காலமும் வாய்ப்பும்

அவர்களுக்குக் கொடுத்தீர்.

21உம் மக்களுக்கு

நீர் எவ்வளவோ கண்டிப்போடு

தீர்ப்பு வழங்கினீர்!

அவர்களுடைய மூதாதையர்களுக்கு

நல்ல வாக்குறுதிகள் நிறைந்த

ஆணைகளையும் உடன்படிக்கைகளையும்

அளித்தீரன்றோ!

கனிவுக்குப்பின் கண்டிப்பு

22நீர் எங்களை

நல்வழிப்படுத்தக் கண்டிக்கிறீர்;

எங்கள் பகைவர்களையோ

பத்தாயிரம் மடங்கு மிகுதியாகத்

தண்டிக்கிறீர்.

நாங்கள் தீர்ப்பு வழங்கும்போது

உமது நன்மையை நினைவுகூரவும்,

நாங்களே தீர்ப்புக் உள்ளாகும்போது

உமது இரக்கத்தை எதிர் பார்க்கவும்

இவ்வாறு செய்கிறீர்.

23அறிவின்மையிலும் நீதியின்மையிலும்

வாழ்க்கை நடத்தியவர்களை

அவர்களுடைய அருவருக்கத்தக்க

செயல்களாலேயே தண்டீத்தீர்.

24அவர்கள் தவறான வழியல்

நெடுந்தொலை சென்றுவிட்டார்கள்;

விலங்குகளுக்குள்ளேயே

மிகவும் அருவருக்கத்தக்கவற்றைத்

தெய்வங்களாகக் கொண்டார்கள்;

அறிவில்லாக் குழந்தைகள்போல்

ஏமாந்து போனார்கள்.

25எனவே அறிவுத்தெளிவு பெறாத

குழந்தைகளை ஏளனம் செய்வதுபோல்

அவர்களை ஏளனம் செய்ய

உமது தீர்ப்பை அனுப்பினீர்.

26இத்தகைய சிறு கண்டிப்புகளினின்று

வரும் எச்சரிக்கைகளுக்குச்

செவிசாய்க்காதவர்கள்

கடவுளின் தக்க தண்டனைத்

தீர்ப்புக்கு உள்ளாக நேரிடும்.

27அவர்கள் எந்தப் படைப்புகளைத்

தெய்வங்களாகக் கருதினார்களோ

அவற்றாலேயே தண்டிக்கப்பட்டார்கள்;

ஆகையால் துன்புற்று எரிச்சலுற்றார்கள்;

தாங்கள் ஒரு காலத்தில்

ஏற்றுக்கொள்ள மறுத்தவரையே

இப்பொழுது உண்மையான கடவுள்

என்று அறிந்து ஏற்றுக்கொண்டார்கள்.

எனவே மிகக் கடுந்தண்டனை

அவர்கள்மேல் வந்து விழுந்தது.


12:3-7 இச 12:31; 18:9-13. 12:8 விப 23:28.