யூதர்களின் வெற்றி

1பன்னிரண்டாம் மாதமாகிய அதார் மாதம் பதின்மூன்றாம் நாள் மன்னரின் ஆணை செயல்படுத்தப்பட்டது.
2அன்று யூதர்களின் பகைவர்கள் அழிந்தார்கள்; யூதர்கள் மீது கொண்ட அச்சத்தால் யாருமே அவர்களை எதிர்த்து நிற்கவில்லை.
3மொர்தெக்காய்க்கு அஞ்சியதால் மாநில ஆளுநர்களும் குறுநில மன்னர்களும் அரச எழுத்தர்களும் யூதர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்;
4ஏனெனில் பேரரசு முழுவதும் மொர்தெக்காய் மதித்துப் போற்றப்படவேண்டும் என்று மன்னர் ஆணையிட்டிருந்தார்.
5[*]
6சூசா நகரில் யூதர்கள் ஐந்நூறு பேரைக் கொன்றார்கள்.
7இவர்களுள் பரிசனஸ்தாயின், தெல்போன், பாஸ்கா,
8பரிதாத்தா, பாரயா, சர்பாக்கா,
9மார்மசிமா, அருபேயு, அர்சேயு, சபுதேத்தான்
10ஆகிய பத்துப் பேரும் அடங்குவர். இவர்கள் எல்லாரும் யூதரின் பகைவனும் பூகையனாகிய அம்மதாத்தாவின் மகனுமாகிய ஆமானின் மைந்தர்கள். மேலும் யூதர்கள் அவர்களின் உடைமைகளைச் சூறையாடினார்கள்.
11சூசாவில் கொல்லப்பட்டபவர்களின் எண்ணிக்கை மன்னருக்கு அன்றே அறிவிக்கப்பட்டது.
12அப்போது மன்னர் எஸ்தரிடம், “சூசா நகரில் மட்டுமே யூதர்கள் ஐந்நூறு பேரைக் கொன்றிருக்கிறார்கள். அவ்வாறாயின், நாட்டின் மற்றப் பகுதிகளில் என்ன செய்திருப்பார்கள் என நினைக்கின்றாய்? உனக்காக நான் வேறு என்ன செய்யவேண்டும்? அதை நான் நிறைவேற்றுவேன்” என்று கேட்டார்.
13எஸ்தர் மன்னரிடம், “இன்றுபோல நாளையும் செய்ய யூதர்களுக்கு அனுமதி வழங்கும். ஆமானின் மைந்தர்கள் பத்துப் பேருடைய பிணங்களையும் தொங்கவிடச் செய்யும்” என்றார்.
14மன்னர் அதற்கு இசைந்தார்; ஆமானின் மைந்தர்களுடைய பிணங்களைத் தொங்கவிடுமாறு நகர யூதர்களிடம் கையளித்தார்.
15அதார் மாதம் பதினான்காம் நாளன்றும் சூசா நகர யூதர்கள் ஒன்று கூடி முந்நூறுபேரைக் கொன்றார்கள்; ஆனால், எதையும் சூறையாடவில்லை.
16பேரரசின் மற்றப் பகுதிகளில் வாழ்ந்த யூதர்கள் ஒன்றுதிரண்டு பகைவர்களிடமிருந்து தங்களையே தற்காத்துக் கொண்டு விடுதலை பெற்றார்கள். அதார் மாதம் பதின்மூன்றாம் நாள் பதினையாயிரம் பேரைக் கொன்றார்கள். ஆனால், எதையும் சூறையாடவில்லை.
17அதே மாதம் பதினான்காம் நாளை அவர்கள் ஓய்வு நாளாக மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் கொண்டாடினார்கள்.
18சூசா நகர யூதர்கள் பதினான்காம் நாளன்றும் ஒன்று கூடினார்கள்; ஆனால், ஓய்வு கொள்ளவில்லை; மாறாக, பதினைந்தாம் நாளை மகிழ்ச்சியுடனும் அக்களிப்புடனும் கொண்டினார்கள்.
19இதனால்தான் தொலை நாடுகளில் சிதறி வாழும் யூதர்கள் அதார் மாதம் பதினான்காம் நாளை நன்னாளாக மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்; ஒருவருக்கொருவர் உணவுப் பொருள்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். ஆனால், மாநகர்களில் வாழ்கிறவர்கள் அதார் மாதம் பதினைந்தாம் நாளை நன்னாளாகக் கொண்டாடி, உணவுப் பொருள்களைப் பரிமாறிக்கொள்கிறார்கள்.

பூரிம் திருவிழா

20மொர்தெக்காய் இவற்றை ஒரு நூலில் எழுதி, அருகிலும் தொலையிலுமாக அர்த்தக்சஸ்தாவின் பேரரசில் வாழ்ந்த யூதர்களுக்கு அனுப்பினார்.
21அதார் மாதம் பதினான்காம் நாளையும் பதினைந்தாம் நாளையும் நன்னாள்களாகக் கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டார்;
22ஏனெனில் இந்நாள்களில்தாம் யூதர்கள் தங்கள் பகைவர்களிடமிருந்து விடுதலை பெற்றார்கள். இந்த அதார் மாதத்தில் தான் அவர்களின் துன்பம் இன்பமாக மாறியது; துயர நாள் நன்னாளாக மாறியது. இந்த மாதம் முழுவதும் விருந்தாடி, மகிழ்ச்சியுடன் அந்த நன்னாள்களைக் கொண்டாடுமாறும் உணவுப்பொருள்களை நண்பர்களுக்கும் ஏழைகளுக்கும் அனுப்பி வைக்குமாறும் அவர் எழுதினார்.
23மொர்தெக்காய் யூதர்களுக்கு எழுதியிருந்ததை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
24மாசிடோனியனாகிய அம்மதாத்தாவின் மகன் ஆமான் யூதர்களை எதிர்த்தெழுந்ததையும், அவர்களை அழிக்கும் நாளைக் குலுக்கல் முறையில் தெரிவு செய்ததையும்,
25தம்மைத் தூக்கிலிடுமாறு அவன் மன்னரை அணுகி வேண்டிக்கொண்டதையும், யூதர்களுக்கு அவன் இழைக்கத் திட்டமிட்டிருந்த தீமைகள் அனைத்தும் அவனுக்கே நேர்ந்ததையும், அவனும் அவனுடைய மைந்தர்களும் தூக்கிலிடப்பட்டதையும் மொர்தெக்காய் அதில் விளக்கியிருந்தார்.
26இதன்பொருட்டு இந்நாள்கள் ‛பூரிம்’* என யூதர்களால் அழைக்கப்படுகின்றன. எபிரேய மொழியில் ‛பூரிம்’ என்னும் சொல்லுக்குத் ‛திருவுளச் சீட்டுகள்’ என்பது பொருள். தம் மடலில் எழுதப்பட்டிருந்தவை காரணமாகவும், யூதர்கள் துன்புற்றவை அவர்களுக்கு நேர்ந்தவை காரணமாகவும் இவ்விழாவைக் கொண்டாடுமாறு மொர்தெக்காய் பணித்தார்.
27அவ்வாறே யூதர்களும் இதைத் தவறாமல் கொண்டாடத் தங்கள் சார்பாகவும் தங்கள் வழிமரபினர் சார்பாகவும் யூத மதத்தைத் தழுவியவர்கள் சார்பாகவும் பின்வருமாறு உறுதிபூண்டார்கள்: அந்நாள்கள் எல்லா நகர்களிலும் குடும்பங்களிலும் மாநிலங்களிலும் நினைவுநாள்களாகத் தலைமுறை தலைமுறையாகக் கொண்டாட வேண்டும்;
28‛பூரிம்’ எனப்படும் அந்நாள்களை என்றென்றும் கடைப்பிடிக்கவேண்டும்; அந்நாள்களின் நினைவு அவர்களின் வழிமரபினரிடையே ஒருபோதும் ஒழிந்து போகக்கூடாது.
29அம்மினதாபின் மகளாகிய எஸ்தர் அரசியும் யூதராகிய மொர்தெக்காயும் தாங்கள் செய்தவற்றை எழுத்தில் பொறித்து வைத்தார்கள்; ‛பூரிம்’ திருவிழா பற்றிய ஒழுங்குகள் கொண்ட மடலை உறுதிப்படுத்தினார்கள்.
30[*]
31மொர்தெக்காயும் எஸ்தர் அரசியும் இம்முடிவுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு, அவ்விழாவைக் கண்டிப்பாகக்* கொண்டாட உறுதிபூண்டார்கள்.
32அவ்விழா எப்போதும் கொண்டாடப்படவேண்டும் என்று எஸ்தர் ஆணை பிறப்பித்தார். மக்களின் நினைவில் நிற்கும்பொருட்டு அது ஓர் ஆவணத்தில் பொறிக்கப்பட்டது.

9:5 ‟எனவே யூதர்கள் தங்கள் பகைவர்களை வாளால் கொன்றொழித்தார்கள்; தங்களை வெறுத்தவர்களுக்குத் தாங்கள் விரும்பியபடி செய்தார்கள்” என்னும் பாடம் சில பிரதிகளில் 9:5 ஆக இடம் பெறுகிறது. 9:26 * ‘பூரிம்’ என்பது எபிரேயம்; கிரேக்கத்தில் ‘ப்ரூராய்’ என உள்ளது. 9:30 * கிரேக்கப் பாடத்தில் இவ்வசனம் விடப்பட்டுள்ளது. எபிரேயத்தில் ‟அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் அம்மடல் எழுதப்பட்டு, அகஸ்வேரின் ஆட்சிக்குட்பட்ட நூற்று இருபத்தேழு மாநிலங்களிலும் வாழ்ந்த யூதருக்கு அனுப்பப்பட்டது” என்னும் பாடம் காணப்படுகிறது. 9:31 * ‘தங்களுடைய நலனுக்காக அல்லது நலனைப் பாராமல்’ என்பது கிரேக்க பாடம். ‘நோன்போடும் புலம்பலோடும்’ என எபிரேயப் பாடத்தில் உள்ளது.