முடிவுரை

மொர்தெக்காயின் கனவு நனவாதல்

1நிலத்திலும் நீரிலும் பரவியிருந்த தம் பேரரசில் மன்னர் வரி விதித்தார்.
2அவருடைய ஆற்றல், வீரம், செல்வம், ஆட்சியின் மாட்சி ஆகியவற்றை மக்கள் நினைவு கூரும்படி பாரசீகர், மேதியர் ஆகியோரின் குறிப்பேட்டில் அவை பொறிக்கபட்டன.
அர்த்தக்சஸ்தா மன்னரின் ஆணைப் பேராளராக விளங்கிய மொர்தெக்காய் பேரரசில் மதிப்புக்குரியவராகத் திகழ்ந்தார்; யூதர்களால் போற்றப் பெற்றார்; அன்புக்குரியவராக வாழ்ந்து தம் இனத்தார் அனைவருக்கும் வாழ்க்கை முறைபற்றி விளக்கி வந்தார்.
3aமொர்தெக்காய் பின்வருமாறு கூறினார்: “இவையெல்லாம் கடவுளின் செயல்கள். 3bஇவை குறித்து நான் கண்ட கனவை நினைவு கூர்கிறேன். அதில் எதுவுமே நிறைவேறாமற் போகவில்லை. 3cஅதில் ஒரு சிறிய ஊற்று ஆறாக மாறியது. ஒளி, கதிரவன், மிகுந்த தண்ணீர் ஆகியவையும் காணப்பெற்றன. அந்த ஆறு எஸ்தரைக் குறிக்கும். மன்னர் அவரைத் திருமணம் செய்துகொண்டு அரசியாக்கினார். 3dநானும் ஆமானுமே அந்த இரண்டு அரக்கப் பாம்புகள். 3eஒன்றாக இணைந்து யூதரின் பெயரையே ஒழிக்க முனைந்த நாடுகளே கனவில் வந்த நாடுகள். 3fஎனது நாடு என்பது இஸ்ரயேலாகும். அது கடவுளிடம் கதறியழுததால் மீட்கப்பட்டது. ஆண்டவர் தம் மக்களை மீட்டார்; இத்தீமைகள் அனைத்திலுமிருந்தும் நம்மை விடுவித்தார்; எந்நாட்டிலும் செய்யப்படாத அடையாளங்களையும் அரும்பெரும் செயல்களையும் கடவுள் செய்தார். 3gஇதனால் தம் மக்களுக்கென ஒன்றும், பிற இனங்களுக்கென ஒன்றுமாக இரண்டு நியமங்களை அவர் ஏற்படுத்தினார். 3hகடவுள் திருமுன் எல்லா இனங்களுக்காகவும் தீர்ப்புக்காக் குறிக்கப்பட்ட நேரமும் காலமும் நாளும் வந்தபோது அவர் அந்த இரண்டு நியமங்களையும் சீர் தூக்கி 3iதம் உரிமைச் சொத்தாகிய இஸ்ரயேல் மக்களை நினைவுகூர்ந்து அவர்களுக்குச் சாதகமான தீர்ப்பு வழங்கினார். 3kஆகவே இஸ்ரயேல் மக்கள் கடவுள் திருமுன் ஒன்றுகூடி, அதார் மாதம் பதினான்காம் நாளையும் பதினைந்தாம் நாளையும்* தலைமுறை தலைமுறையாக மகிழ்ச்சியுடனும் அக்களிப்புடனும் என்றென்றும் கொண்டாடவேண்டும்.”

பிற்சேர்க்கை

3lதாலமி, கிளியோபத்ரா ஆகியோருடைய ஆட்சியின் நான்காம் ஆண்டில், தாம் ஒரு குரு என்றும் லேவியர் என்றும் சொல்லிக்கொண்ட தொசித்து, அவருடைய மகனாகிய தாலமி ஆகிய இருவரும் ‛பூரிம்’ பற்றிய மடலை எகிப்துக்குக் கொணர்ந்தார்கள்; இம்மடல் உண்மையானது என்றும், எருசலேமைச் சேர்ந்த தாலமியின் மகன் லிசிமாக்கு இதை மொழிபெயர்த்தார் என்றும் தெரிவித்தார்கள்.

10:3a-f, 3a-b எஸ் (கி) 1:1 d-k.
10:3k * இவ்விழா பெப்ருவரி-மார்ச் மாதத்தில் கொண்டாடப்படும்.