1ஆட்சிமன்றத்துக்கு வெளியே நின்ற கூட்டம் எழுப்பிய கூச்சல் ஓய்ந்தபின் அசீரியப் படைத் தலைவன் ஒலோபெரின் அயல் நாட்டினர் அனைவரின் முன்னிலையிலும் அக்கியோரிடமும் மோவாபியர் அனைவரிடமும் பின்வருமாறு கூறினான்;
2“இஸ்ரயேல் இனத்தாரோடு போரிட வேண்டாம்; ஏனெனில், அவர்களின் கடவுள் அவர்களைப் பாதுகாப்பார் என எங்களுக்கு இன்று இறைவாக்குரைக்க, அக்கியோரே, நீ யார்? எப்ராயிமின் கூலிப் படைகளே, நீங்கள் யார்? நெபுகத்னேசரைத் தவிர வேறு தெய்வம் உளரோ? அவர் தம் படையை அனுப்பி இஸ்ரயேலரை உலகிலிருந்தே அழித்தொழிப்பார். அவர்களின் கடவுள் அவர்களைக் காப்பாற்றமாட்டார்.
3ஆனால், மன்னரின் பணியாளர்களாகிய நாங்கள் அவர்கள் எல்லாரையும் ஓர் ஆளை வீழ்த்துவதைப்போல் எளிதாகக் கொன்றழிப்போம். எங்கள் குதிரைப்படையை அவர்களால் எதிர்த்து நிற்க முடியாது.
4இப்படைகளைக் கொண்டு அவர்களைத் தீக்கிரையாக்குவோம். அவர்களின் மலைகளெங்கும் அவர்களது குருதி வழிந்தோடும்; அவர்களின் சமவெளிகள் அவர்களுடைய சடலங்களால் நிரம்பும். அவர்களால் எங்களை எதிர்த்து நிற்க முடியாது. அவர்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள், என்கிறார் உலகிற்கெல்லாம் தலைவரான நெபுகத்னேசர் மன்னர். அவர் உரைத்துவிட்டார். அவர் உரைத்த சொல் எதுவும் பொய்க்காது.
5இன்று இச்சொற்களைப் பிதற்றிய அக்கியோரே, நீ அம்னோனியரின் கைக்கூலி, நயவஞ்சகன்! இன்றுமுதல், எகிப்தினின்று வெளிவந்த இந்த இனத்தை நான் பழிவாங்கும்வரை நீ என் முகத்தில் விழிக்காதே.
6நான் திரும்பிவரும்பொழுது, என் படையின் வாளும் என் பணியாளர்களின் வேலும்* உன் விலாவைக் குத்தி ஊடுருவும். இஸ்ரயேலரோடு நீயும் வெட்டி வீழ்த்தப்படுவாய்.
7இப்போது என் பணியாளர்கள் உன்னை மலைநாட்டுக்குக் கொண்டு செல்வார்கள்; மலைப்பாதை அருகே உள்ள நகர் ஒன்றில் உன்னை விட்டுவிடுவார்கள்.
8இஸ்ரயேலரோடு அழிக்கப்படும்வரை நீ சாகமாட்டாய்.
9அவர்கள் பிடிபடமாட்டார்கள் என நீ மனமார நம்பினால், பிறகு ஏன் உன் முகம் வாட்டமுறவேண்டும்? நான் கூறிவிட்டேன். என் சொற்களில் எதுவும் பொய்க்காது.”

அக்கியோர் இஸ்ரயேலரிடம் கையளிக்கப்படல்

10அக்கியோரைப் பிடித்துப் பெத்தூலியாவுக்குக் கொண்டு போய், இஸ்ரயேல் மக்களிடம் ஒப்படைக்கும்படி ஒலோபெரின் தன் கூடாரத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்குக் கட்டளையிட்டான்.
11எனவே பணியாளர்கள் அவனைப் பிடித்துப் பாசறைக்கு வெளியே சமவெளிக்குக் கொண்டு சென்றார்கள்; அங்கிருந்து மலைநாட்டுக்குப் போய், பெத்தூலியாவின் அடிவாரத்தில் இருந்த நீரூற்றுகளை அடைந்தார்கள்.
12அந்நகரின் ஆண்கள் இவர்களை மலையுச்சியில் கண்டபொழுது தங்கள் படைக்கலங்களை எடுத்துக்கொண்டு நகரிலிருந்து வெளியேறி மலையுச்சிக்கு ஏறிச்சென்றார்கள்; கவண் வீசுவோர் அனைவரும் ஒலோபெரினின் பணியாளர் மீது கற்களை எறிந்து இவர்கள் மேலே ஏறிவராதவாறு தடுத்தார்கள்.
13எனவே இவர்கள் மலையிடுக்கில் பதுங்கிக்கொண்டு, அக்கியோரைக் கட்டி, மலையடிவாரத்தில் கிடத்தி விட்டுத் தங்கள் தலைவனிடம் திரும்பினார்கள்.
14அப்பொழுது இஸ்ரயேலர் தங்கள் நகரிலிருந்து கீழே இறங்கி வந்து, அக்கியோரைக் கட்டவிழ்த்துப் பெத்தூலியாவுக்கு அழைத்துச் சென்று தங்கள் நகரப் பெரியோர்முன்அவரை நிறுத்தினர்.
15அக்காலத்தில் சிமியோன் குலத்தைச் சேர்ந்த மீக்காவின் மகன் ஊசியா, கொதொனியேலின் மகன் காபிரி, மெல்கியேலின் மகன் கார்மி ஆகியோர் நகரப் பெரியோராய் விளங்கினர்.
16அவர்கள் நகரின் மூப்பர்கள் அனைவரையும் ஒன்று கூட்டினார்கள். மக்கள் நடுவில் அக்கியோரை நிற்க வைத்தார்கள். உடனே இளைஞர்கள், பெண்கள் ஆகிய அனைவரும் கூட்டம் நடந்த இடத்திற்கு ஓடிவந்தார்கள். அப்பொழுது ஊசியா நிகழ்ந்தது என்ன என்று அக்கியோரை வினவினார்.
17அவர் மறுமொழியாக, ஒலோபெரினின் ஆட்சி மன்றத்தில் நடந்தது, அசீரியரின் தலைவர்கள் முன்னிலையில் தான் எடுத்துச்சொன்னது, இஸ்ரயேல் இனத்தாருக்கு எதிராகத் தான் செய்யவிருந்ததை ஒலோபெரின் இறுமாப்புடன் உரைத்தது ஆகிய அனைத்தையும் அவர்களுக்குத் தெரிவித்தார்.
18இதனால், மக்கள் குப்புற விழுந்து, கடவுளைத் தொழுதார்கள்.
19“விண்ணகக் கடவுளாகிய ஆண்டவரே, எங்கள் பகைவர்களின் இறுமாப்பைப் பாரும்; எங்களுடைய இனத்தாரின் தாழ்நிலையைக் கண்டு மனமிரங்கும். இன்று தங்களையே உமக்கென்று அர்ப்பணித்துக் கொண்ட மக்களைக் கண்ணோக்கும்” என்று மன்றாடினார்கள்.
20பிறகு அவர்கள் அக்கியோருக்கு ஆறுதல்கூறி, அவரைப் பெரிதும் பாராட்டினார்கள்.
21ஊசியா அவரைக் கூட்டத்திலிருந்து தம் வீட்டுக்கு அழைத்துச்சென்று மூப்பர்களோடு விருந்தளித்தார். அவர்கள் இஸ்ரயேலின் கடவுளது துணையை வேண்டி அன்று இரவு முழுவதும் மன்றாடினார்கள்.

6:6 கிரேக்க பாடம் ‘மக்கள்’.