இஸ்ரயேலரின் வெற்றி

1கூடாரங்களில் இருந்தவர்கள் நிகழ்ந்தது பற்றிக் கேள்விப்பட்டுத் திகைத்துப்போனார்கள்.
2அச்சமும் நடுக்கமும் அவர்களை ஆட்கொள்ள, அவர்கள் எல்லாரும் ஒருவர் மற்றவருக்காகக் காத்திராமல் சிதறி ஓடினார்கள்; சமவெளியிலும் மலையிலும் இருந்த பாதைகளிலெல்லாம் தப்பியோடினார்கள்.
3பெத்தூலியாவைச் சுற்றி இருந்த மலைப்பகுதியில் பாசறை அமைத்திருந்தவர்களும் வெருண்டோடினார்கள். இஸ்ரயேல் மக்களுள் படைவீரராய் இருந்த அனைவரும் அவர்கள் மேல் பாய்ந்து தாக்கினர்.
4பெத்துமஸ்தாயிம், பேபாய், கோபா, கோலா ஆகிய நகரங்களுக்கும், இஸ்ரயேலின் எல்லா எல்லைகளுக்கும் ஊசியா ஆளனுப்பி, நிகழ்ந்தவற்றைத் தெரியப்படுத்தினார்; மேலும் அவர்கள் அனைவரும் தங்களுடைய பகைவர்கள்மேல் பாய்ந்து அழித்தொழிக்கத் தூண்டினார்.
5இஸ்ரயேல் மக்கள் அனைவரும் இதைக் கேள்வியுற்று ஒன்றுசேர்ந்து எதிரிகள்மீது பாய்ந்து, கோபாவரையிலும் துரத்தித் தாக்கினார்கள். அவ்வாறே எருசலேம் மக்களும் மலைநாட்டு மக்கள் அனைவரும் அவர்களோடு சேர்ந்து கொண்டார்கள்; ஏனெனில், பகைவர்களது பாசறையில் நிகழ்ந்தவற்றை அவர்கள் அறிந்திருந்தார்கள். கிலயாத்தினரும் கலிலேயரும் பகைவர்களது படையைப் பக்கவாட்டில் தாக்கித் தமஸ்குவையும் அதன் எல்லைகளையும் தாண்டி அவர்களைப் படுகொலை செய்தார்கள்.
6பெத்தூலியாவில் எஞ்சியிருந்தோர் அசீரியரின் பாளையத்தைத் தாக்கினர்; அதைச் சூறையாடிப் பெருஞ்செல்வங்களைச் சேர்த்துக் கொண்டனர்.
7படுகொலைக்குப்பின் இஸ்ரயேலர் திரும்பியபோது எஞ்சியிருந்தவற்றைக் கைப்பற்றினர். மலையிலும் சமவெளியிலும் இருந்த ஊர்களிலும் நகர்களிலும் வாழ்ந்த மக்கள் அங்கு இருந்த மிகுதியான பொருள்களைக் கைப்பற்றினார்கள்.

வெற்றி விழா

8இஸ்ரயேலுக்கு ஆண்டவர் செய்திருந்த நன்மைகளை நேரில் காணவும், யூதித்தைச் சந்தித்துப் பாராட்டவும், தலைமைக் குரு யோவாக்கிமும் எருசலேமில் வாழ்ந்து வந்த இஸ்ரயேல் மக்களின் ஆட்சி மன்ற உறுப்பினர்களும் வந்தார்கள்.
9அவர்கள் அனைவரும் யூதித்திடம் வந்து ஒருமித்து அவரை வாழ்த்தினார்கள். “நீரே எருசலேமின் மேன்மை; நீரே இஸ்ரயேலின் பெரும் மாட்சி; நம் இனத்தாரின் உயர் பெருமை நீரே!
10இவற்றையெல்லாம் உம் கையாலேயே ஆற்றியிருக்கிறீர்; இஸ்ரயேலுக்கு நன்மைகள் செய்திருக்கிறீர். இவைகுறித்துக் கடவுள் மகிழ்ச்சி அடைந்துள்ளார். எல்லாம் வல்ல ஆண்டவர் எக்காலத்துக்கும் உமக்கு ஆசி வழங்குவாராக” என்று வாழ்த்தினார்கள். மக்கள் அனைவரும், “அவ்வாறு ஆகட்டும்” என்றார்கள்.
11மக்கள் அனைவரும் முப்பது நாளாக எதிரிகளின் பாளையத்தைச் சூறையாடினார்கள். ஒலோபெரினின் கூடாரம், வெள்ளித் தட்டுகள், படுக்கைகள், கிண்ணங்கள், மற்றப் பொருள்கள் அனைத்தையும் யூதித்துக்குக் கொடுத்தார்கள். அவர் இவற்றை வாங்கித் தம் கோவேறு கழுதைமேல் ஏற்றினார்; தம் வண்டிகளைப் பூட்டி அவற்றிலும் பொருள்களைக் குவித்துவைத்தார்.
12யூதித்தைக் காண இஸ்ரயேல் பெண்கள் அனைவரும் கூடிவந்து அவரை வாழ்த்தினார்; அவர்களுள் சிலர் அவரைப் போற்றி நடனம் ஆடினர். யூதித்து பூச்செண்டுகளை எடுத்துத் தம்முடன் இருந்த பெண்களுக்கு வழங்கினார்.
13அவரும் அவருடன் இருந்தவர்களும் ஒலிவக் கிளைகளால் முடி செய்து அணிந்து கொண்டார்கள். எல்லா மக்களுக்கும் முன்பாக யூதித்து சென்று, எல்லாப் பெண்களையும் நடனத்தில் வழிநடத்தினார். இஸ்ரயேலின் ஆண்கள் அனைவரும் படைக்கலங்கள் தாங்கியவர்களாய் மாலைகள் சூடிக்கொண்டு, புகழ்ப்பாக்களைப் பாடியவண்ணம் பின்சென்றார்கள்.

யூதித்து பாடிய புகழ்ப்பா

14இஸ்ரயேலர் அனைவர் முன்னும் யூதித்து பின்வரும் நன்றிப் பாடலைப் பாடத் தொடங்கினார். மக்கள் அனைவரும் அவரோடு சேர்ந்து உரத்த குரலில் பாடினார்கள்.