1ஒலோபெரின் யூதித்தை நோக்கி, “பெண்ணே, துணிவுகொள்; அஞ்சாதே, அனைத்துலகுக்கும் மன்னராகிய நெபுகத்னேசருக்குப் பணிபுரிய முன்வரும் எவருக்கும் நான் ஒருபோதும் தீங்கிழைத்ததில்லை.
2இப்பொழுதும், மலைப்பகுதியில் வாழும் உன் இனத்தார் என்னைப் புறக்கணியாதிருந்தால் நான் அவர்களுக்கு எதிராகப் போர் தொடுக்க முனைந்திருக்கமாட்டேன். ஆனால், இதற்கெல்லாம் அவர்களே காரணம்.
3இப்பொழுது சொல்; நீ ஏன் அவர்களிடமிருந்து தப்பியோடி எங்களிடம் வந்திருக்கிறாய்? பாதுகாப்புத் தேடித்தானே வந்துள்ளாய்? துணிவு கொள். இன்று இரவும் இனியும் உனக்கு ஆபத்து எதுவும் நேராது.
4எவரும் உனக்குத் தீங்கிழைக்கமாட்டார்கள். மாறாக, என் தலைவர் நெபுகத்னேசர் மன்னரின் பணியாளரை நடத்துவது போல, யாவரும் உன்னையும் நல்ல முறையில் நடத்துவார்கள்” என்றான்.
5இதற்கு யூதித்து அவனிடம் பின்வருமாறு கூறினார்: “உம் அடியவளின் சொற்களைத் தயை கூர்ந்து கேளும். உம் பணிப்பெண்ணாகிய என்னைப் பேசவிடும். இன்று இரவு என் தலைவரிடம் நான் பொய் சொல்லமாட்டேன்.
6உம் பணிப்பெண்ணான என் சொற்படி நீர் நடந்தால், கடவுள் உமக்கு முழு வெற்றி அளிப்பார்; என் தலைவராகிய நீர் மேற்கொள்ளும் முயற்சிகளில் தோல்வியே காணமாட்டீர்.
7அனைத்துலகின் மன்னரான நெபுகத்னேசரின் உயிர்மேல் ஆணை! எல்லா உயிர்களையும் நெறிப்படுத்த உம்மை அனுப்பியுள்ள அவருடைய ஆற்றல் மேல் ஆணை! மனிதர்கள் மட்டும் உம் வழியாக நெபுகத்னேசருக்குப் பணிவிடை செய்வதில்லை; காட்டு விலங்குகள், கால்நடைகள், வானத்துப் பறவைகள் ஆகியவையும் அவருக்கும் அவருடைய வீட்டார் அனைவருக்கும் பணிந்து உமது ஆற்றலால் உயிர் வாழ்கின்றன.
8உம்முடைய ஞானம் பற்றியும் திறமைகள் பற்றியும் நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம். நாடு முழுவதிலும் நீரே தலைசிறந்தவர் என்றும், அறிவாற்றலில் வல்லவர் என்றும், போர்த் திறனில் வியப்புக்குரியவர் என்றும் உலகம் முழுவதும் அறியும்.
9“அக்கியோர் உமது ஆட்சிமன்றத்தில் அறிவித்தவற்றை நாங்களும் கேள்வியுற்றோம்; ஏனெனில், பெத்தூலியாவின் ஆள்கள் அவரை உயிரோடு விட்டுவைத்ததால், அவர் உம்மிடம் சொல்லியிருந்த அனைத்தையும் அவர்களுக்கும் அறிவித்தார்.
10ஆதலால், தலைவர் பெருமானே, அவருடைய சொற்களைப் புறக்கணியாமல் உமது உள்ளத்தில் இருத்தும். எம் இனத்தார் தங்கள் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்தாலொழிய அவர்களை யாரும் தண்டிக்க முடியாது; வாள்கூட அவர்களுக்கு தீங்கிழைக்க முடியாது. இது உண்மை.
11“இப்போது என் தலைவருக்குத் தோல்வியும் ஏமாற்றமும் ஏற்படாதவாறு சாவு அவர்களுக்கு நேரிடும். ஏனெனில் அவர்களுடைய பாவம் அவர்களை ஆட்கொண்டுவிட்டதால் அவர்கள் தீமை செய்யும்போதெல்லாம் தங்கள் கடவுளுக்குச் சினமூட்டுகிறார்கள்.
12தங்கள் உணவுப்பொருள்கள் தீர்ந்துபோனதாலும் தண்ணீரெல்லாம் வற்றிப்போனதாலும் அவர்கள் தங்கள் கால்நடைகளைக் கொல்ல முடிவு செய்தார்கள்; மேலும், உண்ணக் கூடாது என்று கடவுள் தம் சட்டத்தால் விலக்கிவைத்திருந்தவற்றை உண்ணவும் உறுதிபூண்டார்கள்.
13எருசலேமில் உள்ள எங்களின் கடவுள் திருமுன் பணியாற்றும் குருக்களுக்கென்று தூய்மைப்படுத்தி ஒதுக்கி வைக்கப்பட்ட தானியங்களின் முதற் பலன், திராட்சை இரசம், எண்ணெய் இவற்றில் பத்திலொரு பங்கு ஆகியவற்றைப் பொது மக்களுள் யாரும் தங்கள் கையால் தொடவும் கூடாது என்று திருச்சட்டம் விலக்கியிருந்தும், அவர்கள் அவற்றைத் தங்களுக்கே பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தார்கள்.
14எருசலேமில் வாழ்ந்த மக்களும் இவ்வாறு செய்து வந்தபடியால், ஆட்சி மன்றத்தின் இசைவு பெற்று வர எருசலேமுக்கு ஆளனுப்பியிருக்கிறார்கள்.
15இசைவு பெற்று, அதைச் செயல்படுத்த அவர்கள் முற்படும் பொழுது, அழிவுறுமாறு அவர்கள் அன்றே உம்மிடம் கையளிக்கப்படுவார்கள்.
16ஆகவே, உம் அடியவளாகிய நான் இவற்றையெல்லாம் அறிந்து, அவர்களிடமிருந்து தப்பியோடி வந்துள்ளேன். உம்மிடம் சேர்ந்து அரும்பெரும் செயலாற்றக் கடவுள் என்னை அனுப்பியுள்ளார். இவைபற்றிக் கேள்வியுறும் மாந்தர் எல்லாரும், ஏன் உலகம் முழுவதுமே மலைப்புறுவர்!
17உம் அடியாளாகிய நான் இறைப்பற்று உள்ளவள். இரவும் பகலும் விண்ணகக் கடவுளுக்கு ஊழியம் புரிந்து வருகிறேன். என் தலைவரே, இப்பொழுது உம்மிடம் தங்குவேன். ஆனால், இரவுதோறும் பள்ளத்தாக்குக்குச் சென்று கடவுளை மன்றாடுவேன். இஸ்ரயேலர் பாவம் செய்யும்போது அவர் எனக்கு அறிவிப்பார்.
18நான் வந்து அதை உமக்கு அறிவிப்பேன். பின் உம் படை அனைத்தோடும் நீர் புறப்பட்டுச் செல்லலாம். உம்மை எதிர்ப்பதற்கு அவர்களுள் ஒருவராலும் முடியாது.
19நான் யூதேயா நாடு வழியாக எருசலேம் சேரும்வரை உம்மை வழி நடத்திச் செல்வேன். அங்கு உமக்கு ஓர் அரியணை அமைப்பேன். ஆயன் இல்லா ஆடுகள்போல் இருக்கும் அவர்களை நீர் துரத்தியடிப்பீர். ஒரு நாய்கூட உமக்கு எதிராக உறுமாது. முன்கூட்டியே எனக்கு அறிவிக்கப்பட்ட இவற்றை உமக்குத் தெரிவிக்கவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்.”
20யூதித்து சொன்னதைக் கேட்ட ஒலோபெரினும் அவனுடைய பணியாளர்களும் மகிழ்ச்சியுற்றார்கள். அவரது ஞானத்தைக் கண்டு வியந்து,
21“உலகின் ஒரு முனைமுதல் மறுமுனைவரை உன்னைப் போல அழகும் ஞானம் நிறைந்த பேச்சும் கொண்ட ஒரு பெண் இல்லவே இல்லை” என்றார்கள்.
22பின் ஒலோபெரின் அவரிடம், “எங்கள் கைகளை வலிமைப்படுத்தவும், என் தலைவரை ஏளனம் செய்த மக்களை அழித்தொழிக்கவும் கடவுள் உன்னை அவர்களுக்கு முன்னதாக அனுப்பி வைத்தும் நல்லதே!
23நீ தோற்றத்தில் அழகுவாய்ந்தவள் மட்டுமல்ல, பேச்சில் ஞானம் மிக்கவளும் ஆவாய். நீ சொன்னபடி செய்வாயானால் உன் கடவுள் எனக்கும் கடவுளாவார். நேபுகத்னேசர் மன்னரின் அரண்மனையில் நீ வாழ்வாய். உலகமெங்கும் உனது புகழ் விளங்கும்” என்றான்.

11:9-10 யூதி 5:5-21.