1அவர்கள் நினிவேக்கு எதிரே இருந்த காசெரின் நகரை நெருங்கியபொழுது இரபேல்,
2“உம் தந்தையை எந்நிலையில் விட்டுவந்தோம் என்பது உமக்குத் தெரியும்.
3எனவே உம் மனைவிக்கு முன்னரே நாம் விரைந்து சென்று, மற்றவர்கள் வந்து சேர்வதற்குள் வீட்டை ஒழுங்குபடுத்துவோம்” என்றார்.
4இரபேல் தோபியாவிடம், மீனின் பித்தப்பையைக் கையில் எடுத்துக்கொள்ளும்” என்றார். இருவரும் ஒன்றாகச் சென்றனர். நாயும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றது.
5இதற்கிடையில் அன்னா தம் மகன் வழியைப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தார்.
6மகன் வருவதைக் கண்டு தம் கணவரிடம், “உம் மகன் வருகிறான்; அவனுடன் சென்றவரும் வருகிறார்” என்றார்.

தோபித்துக்குப் பார்வை திரும்புதல்

7தோபியா தம் தந்தையை அணுகுமுன் இரபேல் அவரிடம், “உன் தந்தை பார்வை பெறுவது உறுதி.
8அவருடைய கண்களில் மீனின் பித்தப்பையைத் தேய்த்துவிடும். அது அவருடைய கண்களில் உள்ள வெண்புள்ளிகள் சுருங்கி உரிந்து விழச் செய்யும். உம் தந்தை பார்வை பெற்று ஒளியைக் காண்பார்” என்றார்.
9அன்னா ஓடி வந்து தம் மகனைக் கட்டிப்பிடித்துக்கொண்டு, “மகனே, உன்னைப் பார்த்துவிட்டேன். இனி நான் இறக்கலாம்” என்று கூறி மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தார்.
10தோபித்து எழுந்து, தடுமாறியவாறு முற்றத்தின் கதவு வழியாக வெளியே வந்தார்.
11தோபியா அவரிடம் சென்றார். அவரது கையில் மீனின் பித்தப்பை இருந்தது. தம் தந்தையைத் தாங்கியவாறு அவருடைய கண்களில் ஊதி, “கலங்காதீர்கள், அப்பா” என்றார். பிறகு கண்களில் மருந்திட்டு,
12தம் இரு கைகளாலும் அவருடைய கண்களின் ஓரத்திலிருந்து படலத்தை உரித்தெடுத்தார்.
13தோபித்து தம் மகனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தவாறே, “என் மகனே, என் கண்ணின் ஒளியே, உன்னைப் பார்த்துவிட்டேன்” என்றார்.

14“கடவுள் போற்றி,

அவரது மாபெரும் பெயர் போற்றி!

அவருடைய தூய வானதூதர்

அனைவரும் போற்றி!

அவரது மாபெரும் பெயர்

நம்மைப் பாதுகாப்பதாக!

எல்லா வானதூதரும்

என்றென்றும் போற்றி!

கடவுள் என்னைத் தண்டித்தார்.

இப்போதோ என் மகன் தோபியாவை
நான் காண்கிறேன்”

என்று கடவுளைப் போற்றினார்.

15தோபியா அக்களிப்புடன் கடவுளை வாயாரப் புகழ்ந்துகொண்டே வீட்டிற்குள் நுழைந்தார்; தம் பயணத்தை வெற்றியாக முடித்துவிட்டதாகவும், பணத்தைத் திரும்பப் பெற்றுவிட்டதாகவும், இரகுவேலின் மகள் சாராவை மணம் புரிந்துகொண்டதாகவும், அவள் நினிவேயின் வாயில் அருகில் வந்து கொண்டிருப்பதாகவும் தம் தந்தையிடம் கூறினார்.
16தோபித்து அக்களிப்புடன் ஆண்டவரைப் புகழ்ந்து கொண்டே தம் மருமகளைச் சந்திக்க நினிவேயின் வாயிலுக்குச் சென்றார். நினிவே மக்கள் அவர் செல்வதையும், யாருடைய உதவியுமின்றித் திடமாக நடப்பதையும் கண்டு வியந்தார்கள். தம் கண்களைத் திறந்ததன் வழியாகக் கடவுள் தம்மீது எத்துணை இரக்கம் காட்டியுள்ளார் என்று தோபித்து அவர்கள் முன் அறிக்கையிட்டார்.
17தம் மகன் தோபியாவின் மனைவி சாராவைச் சந்தித்து வாழ்த்தினார். “மருமகளே, உன்னை எங்களிடம் கொண்டுவந்து சேர்த்த உன் கடவுள் போற்றி! மருமகளே, உன் தந்தை வாழ்க! என் மகன் தோபியாவுக்கு என் வாழ்த்துகள். உனக்கும் என் வாழத்துகள். மருமகளே, உன் வீட்டிற்குள் வா. நலம், பேறு, மகிழ்ச்சி ஆகிய அனைத்தும் உன்னோடு வருக!” என்று வரவேற்றார்.
18நினிவேயில் இருந்த யூதர்கள் அனைவருக்கும் அது ஓர் இனிய நாள்.
19தோபித்தின் நெருங்கிய உறவினர் அகிக்காரும் நாதாபும் அவரது மகிழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.