முகவுரை

1இது தோபித்தின் கதை: தோபித்து தொபியேலின் மகன்; தொபியேல் அனனியேலின் மகன்; அனனியேல் அதுவேலின் மகன்; அதுவேல் கபேலின் மகன்; கபேல் இரபேலின் மகன்; இரபேல் இரகுவேலின் மகன்; இரகுவேல் அசியேலின் குடும்பத்தினர், நப்தலி குலத்தைச் சேர்ந்தவர்.
2தோபித்து அசீரியர்களின் மன்னரான எனமேசரின்* காலத்தில் திசிபேயிலிருந்து நாடு கடத்தப்பட்டார். திசிபே வட கலிலேயாவில் ஆசேருக்கு வடமேற்கே தென்திசையில் காதேசு நப்தலிக்குத் தெற்கே, பெயேருக்கு வடக்கே உள்ளது.

தோபித்துக்கு நேர்ந்த சோதனைகள்; தோபித்தின் பற்றுறுதி

3தோபித்தாகிய நான் என் வாழ்நாளெல்லாம் உண்மையையும் நீதியையும் பின்பற்றி வாழ்ந்துவந்தேன்; அசீரிய நாட்டில் உள்ள நினிவே நகருக்கு என்னுடன் நாடு கடத்தப்பட்ட என் உறவின் முறையாருக்கும் என் இனத்தாருக்கும் தருமங்கள் பல செய்துவந்தேன்.
4இளமைப் பருவத்தில் என் நாடாகிய இஸ்ரயேலில் வாழ்ந்தபோது என் மூதாதையான நப்தலியின் குலம் முழுவதும் என் மூதாதையான தாவீதின் வீட்டிலிருந்து பிரிந்து சென்றது; இஸ்ரயேலின் குலங்களெல்லாம் பலியிடுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நகராகிய எருசலேமிலிருந்தும் பிரிந்துசென்றது; எருசலேமில்தான் கடவுளின் இல்லமாகிய கோவில் எல்லாத் தலைமுறைகளுக்கும் எக்காலத்துக்கும் உரியதாகக் கட்டப்பட்டுத் திருநிலைப்படுத்தப்பட்டிருந்தது.
5இஸ்ரயேலின் மன்னர் எரொபவாம் தாண் நகரில் அமைத்திருந்த கன்றுக்குட்டியின் சிலைக்குக் கலிலேயாவின் மலைகளெங்கும் என் உறவின் முறையார் அனைவரும். என் மூதாதையான நப்தலியின் குலம் முழுவதும் பலி செலுத்தி வந்தார்கள்.
6நான் மட்டும் இஸ்ரயேலர் எல்லாருக்கும் எக்காலத்துக்கும் கட்டளையிட்டியிருந்தபடி திருவிழாக்களின்போது பலமுறை எருசலேமுக்குச் சென்றுவந்தேன். அறுவடையின் முதற்கனியையும் விலங்குகளின் தலையீற்றுகளையும் கால்நடையில் பத்திலொரு பங்கையும் முதன்முறை நறுக்கப்பட்ட ஆட்டு முடியையும் எடுத்துக்கொண்டு நான் எருசலேமுக்கு விரைவது வழக்கம்.
7அவற்றைக் காணிக்கையாக்குமாறு ஆரோனின் மைந்தர்களாகிய குருக்களிடம் கொடுத்துவந்தேன்; அதுபோன்று தானியம், திராட்சை இரசம், ஒலிவ எண்ணெய், மாதுளம்பழம், அத்திப்பழம் ஆகியவற்றோடு மற்றப் பழங்களிலும் பத்திலொரு பங்கை எருசலேமில் திருப்பணிபுரிந்துவந்த லேவியரிடம் கொடுத்து வந்தேன்; மேலும் பத்தில் மற்றொரு பங்கை விற்று ஆறு ஆண்டுக்குச் சேர்த்துவைத்த பணத்தை எருசலேமுக்கு எடுத்துச் சென்று பகிர்ந்து கொடுத்து வந்தேன்.
8பத்தில் மூன்றாவது பங்கைக்* கைவிடப்பட்டோர்க்கும் கைம்பெண்களுக்கும் இஸ்ரயேல் மக்கள் நடுவில் யூத மதத்தைத் தழுவி வாழ்ந்தோர்க்கும் கொடுத்துவந்தேன்; ஒவ்வொரு மூன்றாம் ஆண்டும் அதை அவர்களிடம் கொடுக்கச் சென்றபோது, மோசேயின் சட்டத்தில் கட்டளையிட்டிருந்தபடியும், என் பாட்டனார் அனனியேலின் அன்னை தெபோரா விதித்திருந்தபடியும் நாங்கள் விருந்துண்டுவந்தோம். என் தந்தை இறக்கவே, நான் அனாதையானேன்.
9நான் பெரியவனானபோது, என் தந்தையின் வழிமரபைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்தேன்; அவள் வழியாக ஒரு மகனைப் பெற்றெடுத்தேன்; அவனுக்குத் தோபியா என்று பெயரிட்டேன்.
10அசீரியாவுக்கு நான் நாடுகடத்தப்பட்டுக் கைதியாக நினிவேக்குச் சென்றபின் என் உறவின் முறையார் அனைவரும் என் இனத்தாரும் வேற்றினத்தாரின் உணவை உண்டுவந்தனர்.
11ஆனால் நான் வேற்றினத்தாரின் உணவை உண்ணாமல் தவிர்த்து வந்தேன்.
12நான் என் முழுமனத்துடன் என் கடவுளைச் சிந்தையில் இருத்தினேன்.
13எனவே உன்னத இறைவன் எனக்கு அருள்கூர்ந்து, எனமேசரின் முன்னிலையில் என்னைப் பெருமைப்படுத்தினார். எனமேசர் தமக்கு வேண்டியவற்றையெல்லாம் வாங்கித்தருபவனாக என்னை அமர்த்தினார்.
14அவர் இறக்கும் வரை நான் மேதியாவுக்குச் சென்று அவருக்குத் தேவையானவற்றை அங்கிருந்து வாங்கிவந்தேன். அக்காலத்தில் மேதியா நாட்டில் வாழ்ந்துவந்த கபிரியின் உடன்பிறப்பான கபேலிடம்* நானூறு கிலோ** வெள்ளியைக் கொடுத்துவைத்தேன்.
15எனமேசர் இறந்தபின் அவருடைய மகன் சனகெரிபு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அப்போது மேதியாவுக்குச் செல்ல வழி இல்லாமற்போயிற்று; எனவே அங்கு என்னால் செல்ல முடியவில்லை.
16எனமேசரின் காலத்தில் என் இனத்தைச் சேர்ந்த உறவின் முறையாருக்கு தருமங்கள் பல செய்துவந்தேன்.
17பசியுற்றோருக்கு உணவும் ஆடையற்றோருக்கு ஆடையும் அளித்து வந்தேன். என் இனத்தாருள் இறந்த யாருடைய சடலமாவது நினிவே நகர மதில்களுக்கு வெளியே எறியப்பட்டிருக்கக் கண்டால், அதை அடக்கம் செய்துவந்தேன்.
18சனகெரிபு கொன்றவர்களையும் அடக்கம் செய்தேன்; கடவுளைப் பழித்துரைத்ததற்காக விண்ணக வேந்தர் அவருக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கியபொழுது அவர் யூதேயாவிலிருந்து தப்பியோடி விட்டார்; அப்பொழுது அவர் தம் சீற்றத்தில் இஸ்ரயேல் மக்களுள் பலரைக் கொன்றார். நான் அவர்களின் சடலங்களைக் கவர்ந்து சென்று அடக்கம் செய்தேன். சனகெரிபு அவற்றைத் தேடியபொழுது காணவில்லை.
19ஆனால் நினிவேயைச் சேர்ந்த ஒருவன் சென்று நான் அவற்றைப் புதைத்துவிட்டதாக மன்னரிடம் தெரிவித்தான். எனவே நான் தலைமறைவானேன். பின்னர் மன்னர் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு என்னைக் கொல்லத் தேடினார் என்று அறிந்து அஞ்சி ஓடிவிட்டேன்.
20என் உடைமைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, அரண்மனைக்குக் கொண்டு செல்லப்பட்டன; என் மனைவி அன்னாவையும் என் மகன் தோபியாவையும்தவிர எனக்கு எதுவும் எஞ்சியிருக்கவில்லை.
21நாற்பது நாள்களுக்குள் சனபெரிபின் மைந்தர்கள் இருவர் அவரைக் கொன்றுவிட்டு அரராத்து மலைக்கு ஓடிவிட்டனர். அவருக்குப்பின் அவருடைய மகன் சக்கர்தோன் ஆட்சிக்கு வந்தார். என் சகோதரர் அனயேலின் மகன் அகிக்காரை அவர் தம் அரசின் நிதிப் பொறுப்பில் அமர்த்தினார். இதனால் ஆட்சிப் பொறுப்பு முழுவதும் அவனிடம் இருந்தது.
22பின்பு அகிக்கார் எனக்காகப் பரிந்து பேசினதால் நான் நினிவேக்குத் திரும்பி வந்தேன். அசீரிய மன்னர் சனகெரிபுக்கு மது பரிமாறுவோரின் தலைவனாகவும் ஓலைநாயகமாகவும் ஆட்சிப் பொறுப்பாளனாகவும் நிதி அமைச்சனாகவும் அகிக்கார் விளங்கினான். சக்கர்தோனும் அவனை அதே பதவியில் அமர்த்தினார். அகிக்கார் என் நெருங்கிய உறவினன்; என் சகோதரனின் மகன்.

1:6 இச 16:16. 1:21 2 குறி 32:21.
1:2 ‘சல்மனேசர்’ என்னும் பெயர் கிரேக்கத்தில் ‘எனமேசர்’ என வழங்குகிறது. 1:8 ‘பத்தில் மூன்றாவது பங்கை’ என்னும் பாடம் சில தொன்மைவாய்ந்த சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது. 1:14 கபிரியின் மகன் ‘கபேல்’ (காண் 4:20). 1:14 ‘பத்துத்தாலந்து’ என்பது கிரேக்க பாடம். ஒரு தாலந்து வெள்ளி என்பது ஆறாயிரம் தெனாரியத்துக்குச் சமம். ஒரு தெனாரியம் ஒரு தொழிலாளரின் ஒருநாள் கூலிக்கு இணையான உரோமை வெள்ளி நாணயம்.