எண்ணிக்கை முன்னுரை


‘எண்ணிக்கை’ என்னும் இத்திருநூல் இஸ்ரயேலரின் வரலாற்றில், அவர்கள் சீனாய் மலையை விட்டுப் புறப்பட்டு, வாக்களிக்கப்பட்ட நாட்டின் கிழக்கு எல்லையை அடைந்ததுவரை நாற்பது ஆண்டுகளாக நிகழ்ந்தவற்றின் தொகுப்பாகும். சீனாய் மலையினின்று புறப்படும் முன்னும் யோர்தானுக்குக் கிழக்கே மோவாபில் ஒரு தலைமுறை கடந்த பின்னும் மோசே செய்த கணக்கெடுப்பின் காரணமாக இந்நூல் இப்பெயரைப் பெறுகிறது.

மேலும் காதேசு-பர்னேயாவில் இஸ்ரயேலருக்கு நேர்ந்த இன்னல்களும், அம்மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகச் செய்த கிளர்ச்சியும் இந்நூலில் விரித்துரைக்கப்படுகின்றன. ஆயினும் கடவுள், மக்கள்மேல் அக்கறைகொண்டு அவர்களின் குறைகளைப் பொருட்படுத்தாது அவர்களை ஏற்றுக்கொள்ளும் அன்பையும் இந்நூல் எடுத்துக்காட்டுகின்றது. அதுபோன்று, கடவுளுக்கும் மக்களுக்கும் மோசே உண்மையுடன் பணியாற்றுவது இந்நூலில் சிறப்பிடம் பெறுகின்றது.

நூலின் பிரிவுகள்

  1. இஸ்ரயேல் மக்கள் சீனாய் மலையைவிட்டுப் புறப்பட ஆயத்தப்படுதல் 1:1 - 9:29
      அ) மக்கள்தொகை முதல் கணக்கெடுப்பு 1:1 - 4:49
      ஆ) சட்டங்களும் விதிமுறைகளும் 5:1 - 8:26
      இ) இரண்டாம் பாஸ்கா 9:1 - 23
  2. சீனாய் மலை முதல் மோவாபு வரை 10:1 - 21:35
  3. மோவாபில் நிகழ்ந்தவை 22:1 - 32:42
  4. எகிப்து தொடங்கி மோவாபு வரையிலான விடுதலைப் பயண நிகழ்ச்சிகளின் சுருக்கம் 33:1 - 49
  5. யோர்தானைக் கடக்குமுன் கொடுக்கப்பட்ட கட்டளைகள் 33:50 - 36:13