குருக்களின் தூய்மை

1ஆண்டவர் மோசேயிடம் கூறியது: “ஆரோனின் புதல்வரான குருக்களுக்குச் சொல்; அவர்களுள் எவனும் தன் இனத்தாரில் இறந்துபோன ஒருவராலே தன்னைத் தீட்டப்படுத்த வேண்டாம்.
2தனக்கு இரத்த உறவான தாய், தந்தை, மகன், மகள், சகோதரன்,
3மணமாகாமல் தன்னுடன் வாழ்ந்த கன்னியான சகோதரி — ஆகியவர்களைத் தவிர
4வேறேவராலும் — திருமணத்தால் உறவானவர் உட்பட — தன்னைத் தூய்மைக் கேட்டிற்கு உட்படுத்தித் தீட்டுப்படவேண்டாம்.
5அவர்கள் தலையை மொட்டையடித்துக் கொள்ளாமலும், தாடியின் ஓரங்களைச் சிரைத்துக்கொள்ளாமலும், உடலைக் கீறிக் கொள்ளாமலும் இருப்பார்கள்.
6அவர்கள் தங்கள் கடவுளின் பெயரைக் கெடுக்காமல் அவருக்கு ஏற்ற தூயோராய் இருப்பார்கள். ஆண்டவரின் பலியான தங்கள் கடவுளின் அப்பத்தைச் செலுத்துவதால் அவர்கள் தூய்மையாய் இருக்க வேண்டும்.
7விலைமாதையோ தூய்மைக் கேடு உற்றவளையோ அவர்கள் மணம் புரியலாகாது. கணவனால் மணமுறிவு செய்யப்பட்ட பெண்ணையும் மணம்புரியலாகாது. ஏனெனில், குரு தன் கடவுளுக்கு ஏற்ற தூய்மை உடையவனாய் இருத்தல் வேண்டும்.
8அவர்கள் தூயோர்கள். ஏனெனில், அவர்கள் உங்களின் கடவுளுக்கு உணவு படைக்கிறார்கள். உங்களைத் தூய்மையாக்கும் நான் தூயவனாய் இருப்பதால், உங்களுக்குத் தூயோராய் அவர்கள் இருப்பார்கள்.
9குருவின் மகள் வேசியானால், அவள் தன் தந்தைக்குத் தூய்மைக்கேட்டை ஏற்படுத்துகிறாள். அவளை நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்.
10தலையில் திருப்பொழிவு எண்ணெய் வார்க்கப்பட்டு குருத்துவ உடை அணிந்துள்ள தலைமைக் குருவாகிய உன் சகோதரன், தன் தலையை மூடிக் கொள்ள வேண்டும்; தன் உடைகளைக் கிழித்தலாகாது.
11எந்தப் பிணமானாலும் — அது தந்தையுடையதாயினும் தாயுடையதாயினும் அதன் அருகில் சென்று அவன் தன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ள வேண்டாம்.
12தூய கூடத்திலிருந்து வெளிவராமலும் தன் கடவுளின் தூயகத்தை இழிவுபடுத்தாமலும் இருக்க வேண்டும். ஏனெனில், அவனுடைய கடவுளின் திருப்பொழிவு எண்ணெய் தாங்கும் சிறப்பு அவனுக்கு உரியது. நானே ஆண்டவர்!
13கன்னிப்பெண்ணையே அவன் மணம் புரிய வேண்டும்.
14அவன் கைம்பெண்ணையோ மணமுறிவு பெற்றவளையோ, கற்பொழுக்கம் அற்றவளையோ, விலைமாதையோ மணம் புரியாமல், தன் இனத்திலுள்ள ஒரு கன்னிப் பெண்ணையே மணக்க வேண்டும்.
15தன் வழிமரபை இரத்தக் கலப்பற்றதாகப் பாதுகாக்க வேண்டும். ஏனெனில், நானே அவனைத் தூய்மையாக்கும் ஆண்டவர்.”
16ஆண்டவர் மீண்டும் மோசேயிடம் கூறியது:
17“நீ ஆரோனிடம் கூறவேண்டியது; உன் வழிமரபினரில் உடல் ஊனமுற்றவன் தன் கடவுளுக்கு உணவுப் படையலைச் செலுத்துதல் ஆகாது.
18உடல் ஊனமுற்றவன் எவனும் அருகில் வரவேண்டாம்; பார்வையற்றவன், முடவன், குறைந்த அல்லது நீண்ட உறுப்பு உடையவன்,
19கால் கை ஒடிந்தவன்,
20கூனன், குள்ளன், கண்ணில் பூ விழுந்தவன், சொறி சிரங்கு உடையவன், அண்ணகன் எவனும் வேண்டாம்.
21குருவான ஆரோனின் வழி மரபில் உடல் ஊனமுற்ற எவனும் ஆண்டவரின் நெருப்புப் பலியைச் செலுத்த அருகில் வரவேண்டாம். மேலும், உடல் ஊனம் அவனுக்கு இருப்பதால், அவன் தன் கடவுளின் உணவுப் படையலைச் செலுத்தவும் வரக்கூடாது.
22தன் கடவுளின் தூய அப்பத்தை அவன் உண்ணலாம்.
23ஆனால், தொங்குதிரை அருகில் வர வேண்டாம்; பீடத்தை அணுக வேண்டாம். ஏனெனில், அவன் உடலில் குறைபாடு உள்ளது. என் தூயகத்தை இழிவுபடுத்த வேண்டாம். ஏனெனில், நான் அவர்களைத் தூய்மையாக்கும் ஆண்டவர்.”
24மோசே இவற்றை ஆரோனிடமும் அவர் புதல்வரிடமும், இஸ்ரயேல் மக்கள் அனைவரிடமும் கூறினார்.

21:5 லேவி 10:27-28; இச 14:1.