எருசலேமின் வீழ்ச்சி

1ஆண்டவர் கூறுவது இதுவே:

பாபிலோனுக்கும் கல்தேயாவின்

குடிகளுக்கும் எதிராக

அழிவுக் காற்றை எழுப்பி விடுவேன்.

2புடைப்போரைப்

பாபிலோனுக்கு அனுப்பிவைப்பேன்;

அவர்கள் அதைச் சலித்தெடுப்பார்கள்;

தண்டனை நாளில் அவர்கள்

எப்பக்கத்தினின்றும்

அதற்கு எதிராக எழுந்து வருவார்கள்;

அந்த நாட்டை வெறுமையாக்குவார்கள்.

3வில்வீரன் வில்லை

நாணேற்ற விடாதீர்கள்!

தன் கவசத்தை

அணிந்து நிற்க விடாதீர்கள்!

அதன் இளைஞர்கள் யாரையும்

விட்டுவைக்காதீர்கள்

அதன் படையை முற்றிலும் அழித்துப்போடுங்கள்.

4கொலையுண்டோர் கல்தேயரின் நாட்டில்

வீழ்ந்து கிடப்பர்.

காயமடைந்தோர்

அதன் தெருக்களில் கிடப்பர்.

5தங்கள் கடவுளாகிய

படைகளின் ஆண்டவர்

இஸ்ரயேலையும் யூதாவையும்

கைவிட்டுவிடவில்லை.

இஸ்ரயேலின் தூயவருக்கு எதிராகக்

கல்தேயரின் நாடு

குற்றங்களால் நிறைந்துள்ளது.

6பாபிலோன் நடுவினின்று

தப்பியோடுங்கள்;

ஒவ்வொருவரும் தம் உயிரைக்

காத்துக்கொள்ளட்டும்;

அதன் குற்றங்களுக்காக

நீங்கள் அழிந்து போகாதீர்கள்;

இது ஆண்டவர் பழிவாங்கும் காலம்,

அவரே அதற்குத்

தகுந்த தண்டனை வழங்குவார்;

7பாபிலோன் ஆண்டவரின் கையில்

பொற்கிண்ணம்போல் இருந்தது;

அது மண்ணுலகு முழுவதற்கும்

போதை ஊட்டியது;

மக்களினங்கள் அதன்

திராட்சை இரசத்தைப் பருகின;

நாடுகள் வெறிகொண்டன.

8பாபிலோன் திடீரென்று

விழுந்து நொறுங்கிற்று;

அதற்காகப் புலம்பியழுங்கள்;

அதன் காயத்துக்கு

மருந்து கொண்டு வாருங்கள்;

ஒருவேளை அது நலம் பெறலாம்!

9நாங்கள் பாபிலோனைக்

குணப்படுத்த முயன்றோம்;

அதுவோ நலம் அடைவதாயில்லை!

அதைக் கைவிட்டுவிடுங்கள்;

நாம் ஒவ்வொருவரும்

நம் சொந்த நாட்டுக்குப் போவோம்;

பாபிலோனுக்குரிய தண்டனைத் தீர்ப்பு

விண்ணுலகை எட்டியுள்ளது;

அது வானத்தைச் சென்றடைந்துள்ளது.

10ஆண்டவர் நமக்கு

நீதி வழங்கியுள்ளார்;

வாருங்கள்! நம் கடவுளான

ஆண்டவரின் செயலைச்

சீயோனில் பறைசாற்றுவோம்.

11அம்புகளைக் கூர்மையாக்குங்கள்;

கேடயங்களைக் கையிலெடுங்கள்;

ஆண்டவர் மேதிய அரசர்களைக்

கிளர்ந்தெழச் செய்துள்ளார்;

பாபிலோனை அழிப்பதே அவரது திட்டம்;

இவ்வாறு தம் கோவிலை முன்னிட்டு

ஆண்டவர் பழிவாங்குவார்.

12பாபிலோன் மதில்கள்மேல்

கொடியேற்றுங்கள்;

காவலை வலுப்படுத்துங்கள்;

இரவுக் காவலாளரை நிறுத்துங்கள்;

கண்ணிகளைத் தயார் செய்யுங்கள்;

பாபிலோனின் குடிகளுக்கு எதிராக

ஆண்டவர் உரைத்திருந்ததைத்

தமது திட்டப்படியே நிறைவேற்றுவார்.

13நீர்வளம் கொண்டவனே!

செல்வம் மிகுந்தவனே!

உனக்கு முடிவு வந்துவிட்டது;

உன் வாழ்நாளின் இழை

துண்டிக்கப்பட்டுவிட்டது.

14வெட்டுக்கிளிகளைப் போன்று

எண்ணற்ற மனிதரால் உன்னைத்

திண்ணமாய் நிரப்புவேன்;

அவர்கள் உனக்கு எதிராக

வெற்றி முழக்கம் செய்வார்கள்,

என்று படைகளின் ஆண்டவர்

தம்மேல் ஆணையிட்டுக் கூறியுள்ளார்.

15அவரே தம் ஆற்றலால்

மண்ணுலகைப் படைத்தார்

; தம் ஞானத்தால்

பூவுலகை நிலைநாட்டினார்;

தம் கூர்மதியால்

விண்ணுலகை விரித்தார்.

16அவர் குரல் கொடுக்க,

வானத்து நீர்த்திரள்

முழக்கமிடுகின்றது;

மண்ணுலகின் எல்லையினின்று

முகில்கள் எழச் செய்கின்றார்;

மழை பொழியுமாறு

மின்னல் வெட்டச் செய்கிறார்;

தம் கிடங்குகளினின்று

காற்று வீசச்செய்கிறார்.

17மனிதர் யாவரும் மூடர்கள்,

அறிவிலிகள்;

கொல்லர் எல்லாரும்

தம் சிலைகளால் இகழ்ச்சியுற்றனர்;

அவர்களின் வார்ப்புப் படிமங்கள்

பொய்யானவை;

அவற்றிற்கு உயிர் மூச்சே இல்லை.

18அவை பயனற்றவை,

ஏளனத்துக்குரிய வேலைப்பாடுகள்;

தம் தண்டனையின் காலத்தில்

அவை அழிந்துவிடும்.

19யாக்கோபின் பங்காய் இருப்பவரோ

இவற்றைப் போன்றவர் அல்லர்;

அவரே அனைத்தையும் உருவாக்கியவர்;

தம் உரிமைச் சொத்தாகிய இனத்தை

உருவாக்கியவரும் அவரே;

படைகளின் ஆண்டவர் என்பது

அவர் பெயராகும்.

20நீ என் சம்மட்டியும்

படைக்கருவியும் ஆவாய்;

நான் உன்னைக்கொண்டு

மக்களினங்களை நொறுக்குவேன்;

உன்னைக்கொண்டு

அரசுகளை அழித்தொழிப்பேன்.

21உன்னைக்கொண்டு குதிரையையும்

குதிரை வீரனையும் நொறுக்குவேன்;

உன்னைக்கொண்டு தேரையும்

தேரோட்டியையும் நொறுக்குவேன்.

22உன்னைக்கொண்டு ஆணையும்

பெண்ணையும் நொறுக்குவேன்;

உன்னைக்கொண்டு முதியோனையும்

சிறுவனையும் நொறுக்குவேன்;

உன்னைக்கொண்டு இளைஞனையும்

இளம்பெண்ணையும் நொறுக்குவேன்;

23உன்னைக்கொண்டு ஆயனையும்

அவனது மந்தையையும் நொறுக்குவேன்;

உன்னைக்கொண்டு உழவனையும்

அவன் காளைகளையும் நொறுக்குவேன்;

உன்னைக்கொண்டு ஆளுநர்களையும்

அதிகாரிகளையும் நொறுக்குவேன்;

24பாபிலோனும் கல்தேயாவின்

குடிகள் எல்லாரும்

சீயோனில் செய்த தீச்செயல்

அனைத்தின் பொருட்டு,

உங்கள் கண்முன்னால்

அவர்களைப் பழிவாங்குவேன்,

என்கிறார் ஆண்டவர்.

25அழிவைக் கொணரும் மலையே,

மண்ணுலகு முழுவதையும் அழிப்பவனே,

நான் உனக்கு எதிராய் இருப்பேன்,

என்கிறார் ஆண்டவர்.

நான் உனக்கு எதிராய்

என் கையை நீட்டுவேன்;

உன்னைப் பாறை முகடுகளினின்று

உருட்டிவிடுவேன்;

உன்னை எரிந்துபோன

மலை ஆக்குவேன்.

26மூலைக்கல் என்றோ, அடிக்கல் என்றோ,

உன்னிடமிருந்து கல் எடுக்கப்படாது;

நீ என்றும் பாழடைந்தே கிடப்பாய்,

என்கிறார் ஆண்டவர்.

27மண்ணுலகின்மேல் கொடி ஏற்றுங்கள்;

மக்களினங்கள் நடுவில்

எக்காளம் ஊதுங்கள்;

அதனை எதிர்த்துப் போரிட

மக்களினங்களைத் தயார் செய்யுங்கள்;

அதனை எதிர்க்குமாறு

அரராத்து, மின்னி, அஸ்கனாசு

ஆகிய அரசுகளுக்கு

அழைப்பு விடுங்கள்;

அதற்கு எதிராய்த்

தானைத் தலைவனை ஏற்படுத்துங்கள்.

வெட்டுக்கிளிக் கூட்டம்போல்

குதிரைகளைக் கொணருங்கள்.

28அதனை எதிர்த்துப் போரிட

மக்களினங்களைத் தயார் செய்யுங்கள்;

மேதிய மன்னர்கள், ஆளுநர்கள்,

அதிகாரிகளையும்

அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட

எல்லா நாடுகளையும் கூப்பிடுங்கள்.

29மண்ணுலகு நடுநடுங்கி,

வேதனையால் பதைபதைக்கிறது;

பாபிலோன் நாட்டை

மக்கள் குடியிருப்பில்லாத

பாழ்நிலம் ஆக்கும் பொருட்டு

அதற்கு எதிராக

ஆண்டவர் தீட்டியுள்ள திட்டங்கள்

நிலைக்கும்.

30பாபிலோனின் படைவீரர்கள்

போரிடுவதைக் கைவிட்டார்கள்;

அவர்கள் தங்கள்

கோட்டைகளுக்குள்ளேயே

தங்கியிருக்கிறார்கள்;

அவர்களின் வலிமை

குன்றிப்போயிற்று.

அவர்கள் பேடிகளாய் மாறிவிட்டார்கள்.

அதன் உறைவிடங்கள் எரிந்துபோயின;

அதன் தாழ்ப்பாள்கள் உடைந்து போயின.

31-32ஓர் அஞ்சற்காரன்

அடுத்த அஞ்சற்காரனைச்

சந்திக்க ஓடுகின்றான்;

ஒரு தூதன் அடுத்த தூதனைச்

சந்திக்க ஓடுகின்றான்;

“நகர் எல்லாப் பக்கங்களிலும்

கைப்பற்றப்பட்டது;

கடவுத் துறைகள் பிடிப்பட்டன;

கோட்டை, கொத்தளங்கள்

தீக்கிரையாயின;

படைவீரர்கள் பீதியடைந்துள்ளனர்”, எனப்

பாபிலோனிய மன்னனிடம் அறிவிக்க

அவர்கள் ஓடுகிறார்கள்.

33இஸ்ரயேலின் கடவுளாகிய

படைகளின் ஆண்டவர்

கூறுவது இதுவே;

புணையடிக்கும் காலக் களத்துக்கு

மகள் பாபிலோன் ஒப்பாவாள்;

இன்றும் சிறிது காலத்தில்

அதன் அறுவடைக் காலம் வரும்.

34பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர்

என்னை விழுங்கிவிட்டான்;

அவன் என்னைக்

கசக்கிப் பிழிந்து விட்டான்;

வெறுமையான பாத்திரம்போல்

என்னை ஆக்கிவிட்டான்;

அரக்கன் போன்று

என்னை விழுங்கிவிட்டான்;

என் அருஞ்சுவை உணவுகளால்

தன் வயிற்றை நிரப்பிக்கொண்டான்.

என்னைக் கொப்பளித்துத்

துப்பிவிட்டான்.

35“எனக்கும் என் உறவினர்க்கும்

இழைக்கப்பட்ட கொடுமை

பாபிலோன் மேல் வரட்டும்” என்று

சீயோன் குடிகள் கூறட்டும்;

“என் இரத்தப் பழி

கல்தேயக் குடிகள்மீது

வந்துவிழட்டும்,” என்று

எருசலேம் சொல்லட்டும்.

36எனவே, ஆண்டவர்

இவ்வாறு கூறுகிறார்:

நானே உனக்காக வழக்காடுவேன்;

உன் பொருட்டுப் பழிவாங்குவேன்;

அதன் கடல் வற்றிப் போகச் செய்வேன்;

அதன் நீரூற்றுகள்

காய்ந்துபோகச் செய்வேன்.

37பாபிலோன் பாழ்மேடு ஆகும்;

குள்ளநரிகளின் உறைவிடமாக மாறும்.

அது குடியிருப்பாரற்றுப்

பேரச்சத்திற்கும் நகைப்பிற்கும்

உள்ளாகும்.

38அவர்கள் சிங்கங்களைப்போல்

சேர்ந்து கர்ச்சிப்பார்கள்;

சிங்கக் குட்டிகளைப்போல் சீறுவார்கள்.

39அவர்கள் கொதித்தெழுந்தபொழுது

நான் அவர்களுக்கு

விருந்து அளிப்பேன்;

அவர்கள் மயங்கி மகிழுமாறு

போதையுறும்வரை

குடிக்கச் செய்வேன்;

அவர்கள் மீளாத் துயில் கொள்வார்கள்;

துயில் எழவே மாட்டார்கள்,

என்கிறார் ஆண்டவர்.

40செம்மறிக்குட்டிகள்,

ஆட்டுக்கிடாய்கள்,

வெள்ளாட்டுக் கிடாய்களைப் போன்று,

நான் அவர்களைக்

கொலைக் களத்திற்குக்

கொண்டுபோவேன்.

41சேசாக்கு இப்படிப்

பிடிபட்டுப் போயிற்றே!

மண்ணுலகு முழுவதன் சிறப்பிடம்

இப்படிக் கைப்பற்றப் பட்டுவிட்டதே!

மக்களினங்கள் நடுவே பாபிலோன்

பாழடைந்துபோனது எவ்வாறு?

42கடலானது பாபிலோன்மீது

கொந்தளித்து வந்துள்ளது;

ஆர்ப்பரிக்கும் அலைகளால்

அது மூடப்பட்டுவிட்டது.

43அதன் நகர்கள் பாழடைந்துவிட்டன;

அது வறண்ட பாலைநிலமாய்

மாறிவிட்டது;

அந்நாட்டில் குடியிருப்பார்

யாரும் இல்லை;

எவரும் அதனைக்

கடந்து செல்லமாட்டார்.

44நான் பாபிலோனில்

பேலைத் தண்டிப்பேன்;

அது விழுங்கினதை

அதன் வாயினின்று கக்கச்செய்வேன்;

மக்களினங்கள் இனி ஒருபோதும்

அங்குக் செல்லமாட்டா;

பாபிலோன் மதிலும்

தரைமட்டமாக்கப்படும்.

45என் மக்களே,

அதனின்று வெளியேறுங்கள்;

ஆண்டவரின் வெஞ்சினத்தினின்று

ஒவ்வொருவனும் தன் உயிரைக்

காத்துக்கொள்ளட்டும்.

46உங்கள் உள்ளம் தளாரதிருக்கட்டும்;

நாட்டில் உலவும் வதந்திகளைத் கேட்டுக்

கலங்காதீர்கள்;

ஓராண்டில் ஒரு வதந்தி உலவும்;

மறு ஆண்டில்

மற்றொரு வதந்தி உருவெடுக்கும்;

நாட்டில் வன்முறை மலியும்;

ஆளுநன் ஆளுநனுக்கு எதிராய்

எழுவான்.

47எனவே நாள்கள் வருகின்றன.

அப்பொழுது நான்

பாபிலோன் சிலைகளைத் தண்டிப்பேன்.

அந்த நாடு முழுவதும் சிறுமையுறும்;

கொலையுண்டோர் அனைவரும்

அதன் நடுவே வீழ்ந்துகிடப்பர்.

48விண்ணுலகும் மண்ணுலகும்

அவற்றில் உள்ள அனைத்தும்

பாபிலோனைக் குறித்து

மகிழ்ச்சிக் குரல் எழுப்பும்;

வடக்கினின்று “அழிப்போர்”

அதை எதிர்த்து வருவர்,

என்கிறார் ஆண்டவர்.

49பாபிலோனை முன்னிட்டு

மண்ணுலகு எங்கும்

மக்கள் கொலையுண்டு வீழ்ந்தனர்;

இஸ்ரயேலில்

கொலையுண்டோரை முன்னிட்டு

இப்போது பாபிலோன்

வீழ்ச்சியுற வேண்டும்.

50வாளுக்குத் தப்பியவர்களே,

போய்விடுங்கள், நிற்காதீர்கள்;

தொலையிலிருந்து

ஆண்டவரை நினைவுகூருங்கள்;

உங்கள் இதயத்தில்

எருசலேம் இடம்பெறட்டும்.

51பழிமொழி கேட்டதால்

நாங்கள் வெட்கத்துக்கு உள்ளானோம்;

ஆண்டவரது இல்லத்தின்

திரு இடங்களுக்குள்

அன்னியர் நுழைந்துவிட்டதால்,

மானக்கேடு எங்கள் முகங்களை

மூடிக்கொண்டது.

52ஆகவே நாள்கள் வருகின்றன,

என்கிறார் ஆண்டவர்.

நான் அதன் சிலைகளைத்

தண்டிப்பேன்;

அந்நாடு எங்கணும்

காயம்பட்டோர் குமுறியழுவர்.

53பாபிலோன் வானம்வரை

தன்னை உயர்த்திக் கொண்டாலும்,

தன் உயர்ந்த கோட்டை

கொத்தளங்களை

வலுப்படுத்திக் கொண்டாலும்,

அழிப்போரை நான்

அதன் மீது அனுப்புவேன்,

என்கிறார் ஆண்டவர்.

54பாபிலோனிலிருந்து

கூக்குரல் கேட்கிறது;

கல்தேயரின் நாட்டிலிருந்து

பேரழிவின் இரைச்சல் கேட்கிறது.

55ஆண்டவர் பாபிலோனை அழிக்கிறார்;

அதன் பெரும் ஆரவாரத்தை

அடக்குகிறார்;

அவர்களின் அலைகள்

பெரும் வெள்ளம்போல் முழங்கும்.

அவர்கள் உரத்த குரலில்

ஆரவாரம் செய்வர்.

56“அழிப்போன்” பாபிலோன் மீதே

வந்துவிட்டான்.

அதன் படைவீரர்கள் பிடிபட்டார்கள்.

அவர்கள் அம்புகள்

முறித்தெறியப்பட்டன.

ஆண்டவர் பழிவாங்கும் கடவுள்;

அவர் திண்ணமாய்

பதிலடி கொடுப்பார்.

57அதன் தலைவர்கள், ஞானிகள்,

ஆளுநர்கள், படைத்தலைவர்கள்,

படைவீரர்கள் ஆகிய எல்லாரையும்

நான் குடிவெறி கொள்ளச்செய்வேன்.

அவர்கள் மீளாத்

துயில் கொள்வார்கள்;

துயில் எழவே மாட்டார்கள்,

என்கிறார் “படைகளின் ஆண்டவர்”

என்னும் பெயர் கொண்ட மன்னர்.

58படைகளின் ஆண்டவர்

கூறுவது இதுவே;

பாபிலோனின் அகன்ற மதில்கள்

முற்றிலும் தரைமட்டமாக்கப்படும்;

அதன் உயர்ந்த வாயில்கள்

தீக்கிரையாகும்;

மக்களின் உழைப்பு வீணாகும்;

மக்களினங்களின் முயற்சிகள்

தீயோடு தீயாகும்.

59யூதா அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில், மாசேயாவின் பேரனும் நேரியாவின் மகனும் அரசப் பயணவிடுதிப் பொறுப்பாளருமான செராயா செதேக்கியாவோடு பாபிலோனுக்குச் சென்றபொழுது, இறைவாக்கினர் எரேமியா அவருக்குக் கொடுத்த கட்டளை;
60பாபிலோன் மேல் வரவிருந்த தண்டனைகள் அனைத்தையும், அதாவது பாபிலோன் மேல் குறித்து மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் எரேமியா ஓர் ஏட்டுச் சுருளில் எழுதி வைத்தார்.
61எரேமியா செராயாவிடம் கூறியது: நீ பாபிலோனை அடைந்தபின், இச்சொற்களை எல்லாம் கண்டிப்பாக வாசி.
62‘ஆண்டவரே, மனிதரோ விலங்கோ எதுவும் வாழாதபடி என்றும் பாழடைந்து கிடக்கும் அளவுக்கு நீர் அந்த இடத்தை அழிக்கப்போவதாகச் சொல்லியிருக்கிறீர்’ எனச் சொல்.
63இச்சுருளை வாசித்து முடித்த பின்னர், அதை ஒரு கல்லில் கட்டி, யூப்பிரத்தீசு நடுவே எறிந்துவிடு.
64“நான் பாபிலோனுக்கு அளிக்கவிருக்கும் தண்டனைக்குப் பின்னர், அது மீண்டும் தலைதூக்க முடியாமல், இவ்வாறே மூழ்கிப்போகும்” என்று சொல். எரேமியாவின் சொற்கள் இத்துடன் முற்றும்.

50:1-51:64 எசா 13:1; 14:23; 47:1-15. 51:7 திவெ 17:2-4; 18:3. 51:9 திவெ 18:5. 51:13 திவெ 17:1. 51:48 திவெ 18:20. 51:49 எரே 51:10-11; திபா 137:8; திவெ 8:5-6. 51:63-64 திவெ 18:21.