1ஏழாம் மாதத்தில் அரச குலத்தவனும் அரசனின் உயர் அதிகாரிகளுள் ஒருவனுமான எலிசாமாவின் பேரனும் நெத்தனியாவின் மகனுமான இஸ்மயேல் தன்னோடு பத்துப் பேரை அழைத்துக் கொண்டு மிஸ்பாவில் இருந்த அகிக்காமின் மகன் கெதலியாவிடம் வந்தான். அங்கு அவர்கள் அனைவரும் ஒன்றாக உணவு அருந்திக் கொண்டிருந்த வேளையில்,
2நெத்தனியாவின் மகன் இஸ்மயேலும் அவனோடு இருந்த பத்துப் பேரும் எழுந்து சாப்பானின் பேரனும் அகிக்காமின் மகனுமான கெதலியாவை — பாபிலோனிய மன்னன் நாட்டின் ஆளுநராக ஏற்படுத்தியிருந்த அவரை — வாளால் வெட்டிக் கொன்றார்கள்.
3மேலும் கெதலியாவோடு மிஸ்பாவில் இருந்த யூதா நாட்டினர் அனைவரையும் அங்கு இருக்க நேரிட்ட கல்தேய வீரர்களையும் இஸ்மயேல் வெட்டி வீழ்த்தினான்.
4கெதலியா கொலை செய்யப்பட்டு இரண்டு நாள் ஆனபின்னும் அது பற்றி யாருக்கும் தெரியவில்லை.
5அப்படியிருக்க செக்கேம், சீலோ, சமாரியா ஆகிய இடங்களிலிருந்து தாடியைச் சிரைத்துக்கொண்டு, ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, உடலைக் கீறிக் கொண்ட எண்பது பேர் ஆண்டவரின் இல்லத்தில் ஒப்புக்கொடுக்குமாறு தானியப் படையல்களும் தூபமும் கையில் ஏந்திக் கொண்டு வந்தனர்.
6அவர்களைச் சந்திக்க நெத்தனியாவின் மகன் இஸ்மயேல் மிஸ்பாவினின்று புறப்பட்டு அழுது கொண்டே சென்றான். அவர்களைச் சந்தித்தபோது, “அகிக்காமின் மகன் கெதலியாவை வந்து பாருங்கள்” என்று அவர்களிடம் கூறினான்.
7அவர்கள் நகருக்குள் நுழைந்திடவே, நெத்தனியாவின் மகன் இஸ்மயேலும் அவனோடு இருந்தவர்களும் அவர்களைக் கொன்று, நிலவறைக்குள் தள்ளிவிட்டனர்.
8அவர்களுள் பத்து பேர் இஸ்மயேலை நோக்கி, “எங்களைக் கொல்லாதீர்; ஏனெனில் கோதுமை, வாற்கோதுமை, எண்ணெய், தேன் ஆகியவற்றைச் சேர்த்து வயலில் மறைத்து வைத்திருக்கிறோம்” என்றார்கள். எனவே அவன் அவர்கள் சகோதரர்களோடு அவர்களைக் கொல்லாமல் விட்டுவிட்டேன்.
9நெத்தனியாவின் மகன் இஸ்மயேல் கெதலியாவை முன்னிட்டுக் கொன்று குவித்த மனிதர்களின் பிணங்கள் எல்லாவற்றையும் ஒரு நிலவறைக்குள் தள்ளி அதை நிரப்பினான். அது இஸ்ரயேல் அரசன் பாசாவினின்று தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு அரசன் ஆசா வெட்டியிருந்ததாகும்.
10மெய்க்காப்பாளரின் தலைவர் நெபுசரதான் அகிக்காமின் மகன் கெதலியா பொறுப்பில் விட்டிருந்த அரசனின் புதல்வியரையும் மிஸ்பாவில் இருந்த மற்ற மக்கள் எல்லாரையும் இஸ்மயேல் சிறைப்பிடித்துக்கொண்டு அம்மோனியரின் நாட்டுக்குப் புறப்பட்டுப் போனான்.
11நெத்தனியாவின் மகன் இஸ்மயேல் செய்திருந்த கொடுமை அனைத்தையும் பற்றிக் காரயாகின் மகன் யோகனானும் அவரோடு இருந்த படைத்தலைவர்கள் அனைவரும் அறியவந்தபொழுது,
12அவர்கள் தங்களோடு இருந்த ஆள்கள் எல்லாரையும் அழைத்துக் கொண்டு, நெத்தனியாவின் மகன் இஸ்மயேலோடு போரிடப் புறப்பட்டு, கிபயோனின் பெரிய நீர்நிலை அருகே அவனை நெருங்கினார்கள்.
13இஸ்மயேலின் பிடியிலிருந்த மக்கள் எல்லாரும் காரயாகின் மகன் யோகனானையும் அவரோடு இருந்த படைத்தலைவர்களையும் கண்டு மகிழ்ச்சியுற்றார்கள்.
14இஸ்மயேல் சிறைப்படுத்தி மிஸ்பாவிலிருந்து கூட்டிச் சென்றிருந்த மக்கள் எல்லோரும் அவனை விட்டுவிட்டுக் காரயாகின் மகன் யோகனானோடு சேர்ந்து கொண்டார்கள்.
15ஆனால் நெத்தனியாவின் மகன் இஸ்மயேல் எட்டுப் பேரோடு யோகனானிடமிருந்து தப்பி, அம்மோனியரின் நாட்டுக்கு ஓடிப் போனான்.
16நெத்தனியாவின் மகன் இஸ்மயேல் அகிக்காமின் மகன் கெதலியாவைக் கொன்றபின் மிஸ்பாவில் எஞ்சியிருந்தோரை* — படைவீரர், பெண்டிர், சிறுவர், அரசவையோர் ஆகியோரை — சிறைப்பிடித்து இழுத்து வந்திருந்தான். இவர்களைக் காரயாகின் மகன் யோகனானும் அவரோடு இருந்த படைத்தலைவர்கள் அனைவரும் கிபயோனிலிருந்து அழைத்துவந்தார்கள்.
17-18அவர்கள் எல்லாரும் புறப்பட்டு, பெத்லெகேமுக்கு அருகே இருந்த கேருத்கிம்காமினில் தங்கினார்கள். பாபிலோனிய மன்னன் நாட்டின் ஆளுநராக ஏற்படுத்தியிருந்த அகிக்காமின் மகன் கெதலியாவை நெத்தனியாவின் மகன் இஸ்மயேல் கொன்று போட்ட காரணத்தினால், அவர்கள் கல்தேயருக்கு அஞ்சி அவர்களிடம் இருந்து தப்பிக்கும்படி எகிப்துக்குப் போக எண்ணியிருந்தார்கள்.

41:1-3 2 அர 25:25.
41:16 * ‘இஸ்மாயேலிடமிருந்து அவன் மீட்டிருந்த’ என்பது எபிரேய பாடம்.