உடன்படிக்கை

1ஆண்டவர் எரேமியாவுக்கு அருளிய வாக்கு:
2“இவ்வுடன்படிக்கையின் விதிமுறைகளைக் கேட்டு யூதாவின் மக்களுக்கும் எருசலேமில் குடியிருப்போருக்கும் அறிவிப்பாய்.
3நீ அவர்களுக்குச் சொல்லவேண்டியது: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே; இவ்வுடன்படிக்கையின் விதிமுறைகளுக்குச் செவி கொடுக்காதவன் சபிக்கப்படுக!
4இரும்புச் சூளையாகிய எகிப்து நாட்டிலிருந்து நான் உங்கள் மூதாதையரைக் கூட்டிக்கொண்டு வந்த நாளில், அவர்களுக்குக் கட்டளையிட்டது இதுவே; என் குரலுக்குச் செவிசொடுத்து, நான் கட்டளையிடுவது அனைத்தையும் செய்யுங்கள். அப்போது நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்; நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.
5இன்று இருப்பதுபோல, அப்பொழுது, பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டை அவர்களுக்குக் கொடுப்பதாக உங்கள் மூதாதையருக்கு நான் ஆணையிட்டுக் கூறியதை உறுதிப்படுத்துவேன்.” அதற்கு நான், ‘ஆண்டவரே! அப்படியே ஆகுக!’ என்று மறுமொழி கூறினேன்.
6ஆண்டவர் என்னிடம் கூறினார்: யூதா நகர்களிலும் எருசலேம் தெருக்களிலும் இந்த விதிமுறைகளை அறிவிப்பாய். ‘உடன்படிக்கையின் விதிமுறைகளைக் கேட்டு அவற்றின்படி ஒழுகுங்கள்’ என்று கூறுவாய்.
7உங்கள் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து கூட்டிக்கொண்டுவந்த நாளிலிருந்து இன்றுவரை அவர்களைத் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளேன். என் குரலுக்குச் செவிகொடுங்கள் என்று வற்புறுத்திக் கூறியுள்ளேன்.
8அவர்களோ கீழ்ப்படியவும் இல்லை; செவிசாய்க்கவும் இல்லை. மாறாக, ஒவ்வொருவரும் தங்கள் தீய இதயப் பிடிவாதத்தின்படி நடந்தனர். ஆகவே நான் கட்டளையிட்டும் அவர்கள் கடைப்பிடிக்காத இந்த உடன்படிக்கையின் விதிமுறை அனைத்தின்படி அவர்களுக்கு எதிராகச் செயல்படுவேன்.
9ஆண்டவர் என்னிடம் கூறியது: யூதா மக்களிடமும் எருசலேம் வாழ் மக்களிடமும் சதித்திட்டம் ஒன்று தோன்றியுள்ளது.
10என் சொற்களுக்குச் செவிசாய்க்க மறுத்து, முன்பு தம் மூதாதையர் செய்த குற்றங்களை இவர்களும் செய்தார்கள். வேற்றுத் தெய்வங்களுக்குப்பின் திரிந்து, அவற்றுக்கு ஊழியம் செய்து, நான் அவர்கள் மூதாதையரோடு செய்த உடன்படிக்கையை இஸ்ரயேல் வீட்டாரும் யூதாவின் வீட்டாரும் முறித்துவிட்டனர்.
11ஆகவே ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ நான் அவர்கள் மீது தீமை வருவிக்கப்போகிறேன். அதிலிருந்து அவர்கள் தப்பமுடியாது. அவர்கள் என்னை நோக்கி அழுகுரல் எழுப்பினாலும் நான் அவர்களுக்குச் செவிசாய்க்கமாட்டேன்.
12அப்போது யூதா நகர்களில் குடியிருப்போரும் எருசலேம் வாழ் மக்களும் தாங்கள் தூபம் காட்டி வணங்கும் தெய்வங்களிடம் ஓடிச்சென்று அழுகுரல் எழுப்புவார்கள். ஆனால் அவர்களுக்குத் தீமை நேர்ந்த காலத்தில் அவற்றால் அவர்களை விடுவிக்கவே முடியாது.
13யூதாவே, உன் நகர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு உனக்குத் தெய்வங்கள் உள்ளன. எருசலேமிலுள்ள தெருக்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, வெட்கக் கேட்டிற்கு — பாகாலுக்கு — தூபம் காட்டப் பீடங்கள் அமைத்தீர்கள்.
14எனவே இந்த மக்களுக்காக நீ மன்றாட வேண்டாம். இவர்களுக்காகக் குரல் எழுப்பவோ வேண்டுதல் செய்யவோ வேண்டாம். ஏனெனில் அவர்களுக்குத் தீமை நேரிடும்பொழுது அவர்கள் என்னை வருந்தி அழைத்தாலும் நான் செவிசாய்க்கமாட்டேன்.
15என் இல்லத்தில் இருக்க என் அன்புக்குரியவளுக்கு என்ன உரிமை? அவள்தான் தன் எண்ணற்ற இழிசெயல்களைச் செய்துவருகிறாளே! உனக்கு வரவிருக்கும் தீமையைப் பலி இறைச்சி உன்னிடமிருந்து அகற்றிவிடுமா? அப்படியிருக்க ஏன் அக்களிக்கிறாய்?
16“பசுமையான, அழகிய, பார்வைக்கினிய பழங்களைக் கொண்ட ஒலிவ மரம்” என்பது ஆண்டவர் உனக்கு இட்ட பெயர். இப்போதோ கொடும் புயற்காற்றின் இரைச்சலுடன் அது தீப்பற்றி எரியச் செய்கிறார். அதன் கிளைகள் தீய்ந்து போயின.
17உன்னை நட்டுவளர்த்த படைகளின் ஆண்டவரே உனக்குத் தீமை வரும் என்று சொல்லிவிட்டார். ஏனெனில் இஸ்ரயேல் வீட்டாரும் யூதா வீட்டாரும் தீச்செயல் செய்தார்கள். எனக்குச் சினமூட்டும்படி பாகாலுக்குத் தூபம் காட்டினார்கள்.

எரேமியாவைக் கொல்லச் சதி

18“ஆண்டவர் எனக்கு

வெளிப்படுத்தினார்;

நானும் புரிந்து கொண்டேன்.

பின்னர் நீர் அவர்களின்

செயல்களை எனக்குக் காட்டினீர்.

19வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும்

சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்;

அவர்கள் எனக்கு எதிராய்,

“மரத்தைப் பழத்தோடு அழிப்போம்;

வாழ்வோரின் நாட்டிலிருந்து

அவனை அகற்றிவிடுவோம்;

அவன் பெயர் மறக்கப்படட்டும்”

என்று சொல்லிச் சதித் திட்டம்

தீட்டியதை நான் அறியாதிருந்தேன்.

20படைகளின் ஆண்டவரே,

நீர் நேர்மையோடு தீர்ப்பிடுபவர்;

உள்ளுணர்வுகளையும்

இதயச் சிந்தனைகளையும்

சோதித்தறிபவர்;

நீர் அவர்களைப் பழிவாங்குவதை

நான் காணவேண்டும்.

ஏனெனில், என் வழக்கை

உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன்.

21“ஆண்டவரின் பெயரால் இறைவாக்கு உரைக்காதே; உரைத்தால் எங்கள் கைகளாலே சாவாய்” என்று கூறி உன் உயிரைப் பறிக்கத் தேடும் அனத்தோத்தைச் சார்ந்த ஆள்களைப்பற்றி,
22படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இதோ நான் அவர்களைத் தண்டிக்கப் போகிறேன். இளைஞர்கள் வாளால் மடிவர்; புதல்வர், புதல்வியர் பஞ்சத்தால் அழிவர்.
23அவர்களுள் யாரும் எஞ்சியிருக்க மாட்டார்கள். அனத்தோத்தைச் சார்ந்த ஆள்கள் மேல், அவர்களைத் தண்டிக்கும் ஆண்டில், தீமை வரச்செய்வேன்.