எரேமியா முன்னுரை


எரேமியா என்ற இறைவாக்கினர் கி.மு. 7ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 6ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தார். இந்நெடிய பணிக்காலத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு நிகழவிருந்த தண்டனைபற்றி முன்னெச்சரிக்கை விடுத்தார். பாபிலோனிய மன்னனால் எருசலேமும் திருக்கோவிலும் அழிவுற்றதையும் யூதா அரசனும் நாட்டினரும் நாடுகடத்தப்பட்டதையும் தம் கண்ணால் கண்டார். ஆயினும் அம்மக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்தினின்று மீளவிருப்பதையும் நாடு புத்துயிர் பெறவிருப்பதையும் முன்னறிவித்தார்.

எரேமியா மென்மையான அன்புள்ளம் படைத்தவர். ஆயினும் மக்களுக்கெதிராகத் தண்டனைத் தீர்ப்பு உரைக்குமாறு இறைவனால் பணிக்கப்பட்டார். கடவுள் தந்த இவ்வழைப்பிற்காகத் ‘துன்புறும் மனிதன்’ ஆன இவரைப்பற்றிய உணர்ச்சிகரமான பல பகுதிகள் இந்நூலில் காணக்கிடக்கின்றன. இந்நூலின் சில சிறப்பான பகுதிகளில், ‘இதயத்தில் எழுதப்பட்ட சட்டத்தைக் கொண்ட புதியதோர் இறைக்குலம் தோன்றவிருக்கிறது’ என்னும் நம்பிக்கைப் பேரொளி சுடர்விடுகின்றது.

நூலின் பிரிவுகள்

  1. எரேமியாவின் அழைப்பு 1:1 - 19
  2. யூதா, எருசலேமுக்கு எதிரான இறைவாக்குகள் 2:1 - 25:38
  3. நல்வாழ்வுபற்றிய இறைவாக்குகள் 26:1 - 35:19
  4. எரேமியாவின் துன்பங்கள் 36:1 - 45:5
  5. வேற்றினத்தார்க்கு எதிரான இறைவாக்குகள் 46:1 - 51:64
  6. பிற்சேர்க்கை: எருசலேமின் வீழ்ச்சி 52:1 - 34