நம்பிக்கை தரும் நல்வாக்கு

1“ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக்

கனிமொழி கூறுங்கள்” என்கிறார்

உங்கள் கடவுள்.

2எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி,

உரத்த குரலில்

அவளுக்குச் சொல்லுங்கள்;

அவள் போராட்டம் நின்றுவிட்டது;

அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது;

அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும்

ஆண்டவர் கையில்

இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்.

3குரலொலி ஒன்று முழங்குகின்றது;

பாலைநிலத்தில் ஆண்டவருக்காக

வழியை ஆயத்தமாக்குங்கள்;

பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக

நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள்.

4பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்;

மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்;

கோணலானது நேராக்கப்படும்;

கரடு முரடானவை சமதளமாக்கப்படும்.

5ஆண்டவரின் மாட்சி

வெளிப்படுத்தப்படும்;

மானிடர் அனைவரும்

ஒருங்கே இதைக் காண்பர்;

ஆண்டவர்தாமே இதை மொழிந்தார்.

6“உரக்கக் கூறு” என்றது ஒரு குரல்;

“எதை நான்

உரக்கக் கூற வேண்டும்?” என்றேன்.

“மானிடர் அனைவரும் புல்லே ஆவர்;

அவர்களின் மேன்மை

வயல்வெளிப் பூவே!

7ஆண்டவரின் ஆவி இறங்கி வரவே,

புல் உலர்ந்துபோம்; பூ வதங்கிவிழும்;

உண்மையில் மானிடர் புல்லே ஆவர்!

8புல் உலர்ந்துபோம்; பூ வதங்கி விழும்;

நம் ஆண்டவரின் வார்த்தையோ

என்றென்றும் நிலைத்திருக்கும்.

9சீயோனே! நற்செய்தி தருபவளே,

உயர்மலைமேல் நின்றுகொள்!

எருசலேமே! நற்செய்தி உரைப்பவரே!

உன் குரலை எழுப்பு, அஞ்சாதே!

‘இதோ உன் கடவுள்’ என்று

யூதா நகர்களிடம் முழங்கு!

10இதோ என் தலைவராகிய ஆண்டவர்

ஆற்றலுடன் வருகின்றார்;

அவர் ஆற்றலோடு

ஆட்சி புரிய இருக்கிறார்.

அவர்தம் வெற்றிப் பரிசைத்

தம்முடன் எடுத்து வருகின்றார்;

அவர் வென்றவை

அவர்முன் செல்கின்றன.

11ஆயனைப்போல் தம் மந்தையை

அவர் மேய்ப்பார்;

ஆட்டுக்குட்டிகளைத்

தம் கையால் ஒன்று சேர்ப்பார்;

அவற்றைத் தம் தோளில்

தூக்கிச் சுமப்பார்;

சினையாடுகளைக்

கவனத்துடன் நடத்திச் செல்வார்.”

இஸ்ரயேலின் ஒப்பற்ற கடவுள்

12கடல்நீரைத் தம் உள்ளங்கை அளவால்

கணக்கிட்டவர் யார்?

வானத்தைச் சாண் அளவால்

கணித்திட்டவர் யார்?

மண்ணுலகின் புழுதியை

மரக்காலால் அளந்தவர் யார்?

மலைகளை நிறைகோலாலும்

குன்றுகளைத் தராசாலும்

நிறுத்தவர் யார்?

13ஆண்டவரின் ஆவிக்கு

வழிகாட்டியவர் யார்?

அவருக்கு அறிவுரையாளனாய் இருந்து

கற்றுத்தந்தவர் யார்?

14யாரிடம் அவர் அறிவுரை கேட்டார்?

அவருக்குப் பயிற்சி அளித்து,

நீதிநெறியை உணர்த்தியவர் யார்?

அவருக்கு அறிவு புகட்டி,

விவேக நெறியைக் காட்டியவர் யார்?

15இதோ, வேற்றினத்தார்,

வாளியிலிருக்கும் நீர்த்துளியாகவும்,

தராசில் ஒட்டிய தூசாகவும்

அவரால் கருதப்படுகின்றனர்.

இதோ, தீவுகளை ஓர் அணுவென

அவர் தூக்குகின்றார்.

16எரிப்பதற்கு லெபனோன் போதாது;

எரிபலிக்கு அதன் விலங்குகள் பற்றாது.

17மக்களினங்கள் யாவும் இல்லாமையாக,

ஒன்றுமில்லாமையாக, வெறுமையாக

அவரால் கருதப்படுகின்றன.

18இறைவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்?

எந்தச் சாயலை அவருக்கு

நிகராகக் கொள்வீர்கள்?

19சிலை வடிவத்தையா?

அதைச் சிற்பி வார்க்கிறான்;

பொற்கொல்லன் அதைப்

பொன்னால் வேய்கிறான்;

வெள்ளிச் சங்கிலிகளை

அதற்கென அமைக்கிறான்.

20இத்தகைய நேர்ச்சையை

நிறைவேற்ற இயலா வறியவன்

உளுத்துப்போகா மரத்தைத்

தேர்ந்து கொள்கிறான்;

அசைக்க முடியாச்

சிலையொன்றை நிறுவ அவன்

கைவினைஞனைத் தேடுகிறான்.

21உங்களுக்குத் தெரியாதா?

நீங்கள் கேள்விப்படவில்லையா?

தொடக்கத்திலிருந்தே உங்களுக்கு

அறிவிக்கப்படவில்லையா?

மண்ணுலகின் அடித்தளங்கள்

இடப்பட்டதுபற்றி நீங்கள்

அறிந்து கொள்ளவில்லையா?

22உலகின் விதானத்தின் மீது

வீற்றிருப்பவர் அவரே;

மண்ணில் வாழ்வோர்

வெட்டுக்கிளி போல்வர்;

வான் வெளியைத்

திரைச் சீலையென விரித்துக்

குடியிருக்கும் கூடாரம்போல்

அதை அமைப்பவரும் அவரே.

23ஆள்வோரை வீழ்த்துபவர் அவரே;

மண்ணுலகின் தலைவர்களை

ஒன்றுமில்லாது ஆக்குபவர் அவரே.

24அவர்கள் நடப்படுகிறார்கள்;

விதைக்கப்படுகிறார்கள்;

ஆனால் அவர்களின் தண்டு

நிலத்தில் வேர்விடுவதற்குள்,

அவர்கள்மேல் அவர் ஊத,

அவர்கள் வாடிவதங்குகின்றனர்.

சூறைக்காற்று அவர்களைத்

துரும்பென அடித்துச் செல்கிறது.

25‘யாருக்கு என்னை ஒப்பிடுவீர்கள்?

எனக்கு நிகரானவர் யார்?’

என்கிறார் தூயவர்.

26உங்கள் கண்களை உயர்த்தி

மேலே பாருங்கள்;

அவற்றைப் படைத்தவர் யார்?

வான் படையை எண்ணிக்கை வாரியாய்

வெளிக்கொணர்ந்து

ஒவ்வொன்றையும்

பெயர் சொல்லி அழைப்பவர் அன்றோ?

அவர் ஆற்றல்மிக்கவராயும்

வலிமை வாய்ந்தவராயும் இருப்பதால்

அவற்றில் ஒன்றேனும் குறைவதில்லை.

27“என் வழி ஆண்டவருக்கு

மறைவாய் உள்ளது;

என் நீதி என் கடவுளுக்குப்

புலப்படவில்லை” என்று

யாக்கோபே, நீ செல்வது ஏன்?

இஸ்ரயேலே, நீ கூறுவது ஏன்?

28உனக்குத் தெரியாதா?

நீ கேட்டதில்லையா?

ஆண்டவரே என்றுமுள கடவுள்;

அவரே மண்ணுலகின்

எல்லைகளைப் படைத்தவர்;

அவர் சோர்ந்து போகார்;

களைப்படையார்;

அவரது அறிவை ஆய்ந்தறிய இயலாது.

29அவர் சோர்வுற்றவருக்கு

வலிமை அளிக்கின்றார்;

வலிமையிழந்தவரிடம்

ஊக்கம் பெருகச் செய்கின்றார்.

30இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர்;

வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர்.

31ஆண்டவர்மேல்

நம்பிக்கை வைத்திருப்பவர்களோ

புதிய ஆற்றல் பெறுவர்.

கழுகுகள்போல் இறக்கை விரித்து

உயரே செல்வர்;

அவர்கள் ஓடுவர்; களைப்படையார்;

நடந்து செல்வர்; சோர்வடையார்.


40:3 மத் 3:3; மாற் 1:3; யோவா 1:23. 40:3-5 லூக் 3:4-6. 40:6-8 யாக் 1:10-11; 1 பேது 1:24-25. 40:10 எசா 62:11; திவெ 22:12. 40:11 எசே 34:15; யோவா 10:11. 40:13 உரோ 11:34; 1 கொரி 2:16. 40:18-19 திப 17:29.