19

1தீயோர் வளமுடன் இருப்பதைக் கண்டு மனம் வெதும்பாதே; அவர்களுடன் உறவு பாராட்டவும் விரும்பாதே. அவர்களுடைய தோழனாயிருக்க விரும்பாதே.
2அவர்கள் மனம் கொடுமை செய்வதையே நினைத்துக்கொண்டிருக்கும்; அவர்கள் பேச்சு, தீமை விளைவிக்கும் பேச்சு.

20

3ஞானம் வீட்டைக் கட்டும்; மெய்யறிவு அதை உறுதியாக அமைக்கும்.
4அருமையும் நேர்த்தியுமான பல பொருள்களால் அறிவு தன் அறைகளை நிரப்பும்.

21

5வீரரைவிட ஞானமுள்ளவரே வலிமை மிக்கவர்; வலிமை வாய்ந்த வரைவிட அறிவுள்ளவரே மேம்பட்டவர்.
6ஏனெனில், போரில் வெற்றி பெற ஆழ்ந்த சிந்தனை தேவை; கவனத்துடன் வகுக்கும் திட்டமே வெற்றிக்கு அடிப்படை.

22

7ஞானம் மூடருடைய அறிவெல்லைக்கு அப்பாற்பட்டது; எனவே, அவர் வழக்குமன்றத்தில் வாய் திறக்கமாட்டார்.

23

8தீமை செய்யத் திட்டமிடுபவன் வஞ்சனையாளன் என்னும் பெயர் பெறுவான்.
9மூடர்கள் பாவத்தைத் தவிர வேறெதற்காகவும் திட்டமிடுவதில்லை; ஒழுங்கீனரை மக்கள் அருவருப்பார்கள்.

24

10நிறைவுள்ள காலத்தில் உன் மனம் சோர்வடையுமானால், குறைவுள்ள காலத்தில் உன் ஆற்றல் இன்னும் குன்றிப்போகுமன்றோ?

25

11கொல்லப்படுவதற்கு இழுத்துச் செல்லப்படுவோரைத் தப்புவிக்கப்பார்; கொலைக்களத்திற்குக் கொண்டு செல்லப்படுவோரைக் காப்பாற்றப்பார்.
12“அதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது” என்று சொல்வாயானால், இதயத்தில் இருப்பதை அறிபவர் உன் எண்ணத்தையும் அறிவார் அல்லவா? உன் உள்ளத்தைப் பார்க்கிறவர் அதை அறிவார் அல்லவா? ஒவ்வொருடைய செய்கைக்கும் ஏற்றபடி அவர் பயனளிப்பார் அல்லவா?

26

13பிள்ளாய்! தேன் சாப்பிடு, அது நல்லது; கூட்டினின்று ஒழுகும் தேன் உன் வாய்க்குத் தித்திப்பாய் இருக்கும்.
14ஞானமும் அறிவும் உனக்கு அவ்வாறே இனிமையாயிருக்கும். அவற்றை நீ அடைந்தால் முடிவில் உனக்குப் பயன் கிடைக்கும்; உன் நம்பிக்கை வீண்போகாது.

27

15கயவர் போல் பதுங்கியிருந்து நல்லவர் வீட்டைக் கெடுக்கப் பார்க்காதே; அவர் குடியிருப்பைப் பாழாக்கி விடாதே.
16நல்லவர் ஏழுமுறை விழுந்தாலும் எழுந்து நிற்பார்; பொல்லார் துன்பம் வந்தவுடன் விழுந்துவிடுவர்.

28

17உன் எதிரி வீழ்ச்சியுறும்போது நீ மகிழாதே; அவர் கால் இடறும் போது களிகூராதே.
18நீ அப்படிச் செய்வாயானால், ஆண்டவர் அதைக் கண்டு உன் மீது சினம்கொள்வார்; அவருக்கு அவர் மீது இருக்கக்கூடிய சினம் தணிந்து போகும்.

29

19தீயோரை முன்னிட்டு எரிச்சல் அடையாதே; வளமுடனிருக்கும் பொல்லாரைக் கண்டு மனம் வெதும்பாதே.
20தீயவருக்கு வருங்காலத்தில் நல்வாழ்வு இராது; ஏனெனில் பொல்லாருடைய விளக்கு அணைந்து போகும்.

30

21பிள்ளாய்! ஆண்டவருக்கும் அரசனுக்கும் அஞ்சி நட; கிளர்ச்சி செய்வாரோடு உறவுகொள்ளாதே.
22ஏனெனில், திடீரென்று அவர்களுக்குக் கேடு வரும்; அந்த இருவரும் எத்தகைய கேட்டை வருவிப்பார்களென்பது யாருக்குத் தெரியும்?

பல்வகைப்பட்ட முதுமொழிகள்

23ஞானிகளின் வேறு சில முதுமொழிகள்: நீதித்தீர்ப்பு வழங்கும்போது ஓர வஞ்சனை காட்டுவது நேரியதல்ல.
24குற்றம் செய்தவரை நேர்மையானவர் எனத் தீர்ப்பளிக்கும் நீதிபதியை மனிதர் சபிப்பர்; உலகனைத்தும் வெறுக்கும்.
25ஆனால், குற்றம் செய்தவரைத் தண்டிக்கும் நீதிபதிக்கு நலமுண்டாகும்; நற்பேறும் கிடைக்கும்.
26நேர்மையான மறுமொழி கூறுபவரே அன்போடு அரவணைக்கும் நண்பராவார்.
27வாழ்க்கைத் தொழிலுக்கான முன்னேற்பாடுகளைச் செய்; வயலை உழுது பண்படுத்து; பிறகு உன் வீட்டைக் கட்டியெழுப்பத் தொடங்கு.
28தக்க காரணமில்லாதபோது அடுத்திருப்பாருக்கு எதிராகச் சான்று சொல்லாதே; உன் வாக்குமூலத்தில் அவருக்கு எதிராக உண்மையைத் திரித்துக் கூறாதே.
29“அவர் எனக்குச் செய்தவாறே நானும் அவருக்குச் செய்வேன்; அவர் செய்ததற்கு நான் பதிலுக்குப் பதில் செய்வேன்” என்று சொல்லாதே.
30சோம்பேறியின் விளைநிலம் வழியாக நான் நடந்துசென்றேன்; அந்த மதிகேடருடைய திராட்சைத் தோட்டத்தினூடே சென்றேன்.
31அதில் எங்கும் முட்செடி காணப்பட்டது; நிலம் முழுவதையும் காஞ்சொறிச் செடி மூடியிருந்தது; அதன் கற்சுவர் இடிந்து கிடந்தது.
32அதை நான் பார்த்ததும் சிந்தனை செய்தேன்; அந்தக் காட்சி எனக்குக் கற்பித்த பாடம் இதுவே;
33இன்னும் சிறிது நேரம் தூங்கு; இன்னும் சிறிது நேரம் உறங்கு; கையை முடக்கிக்கொண்டு இன்னும் சிறிது நேரம் படுத்திரு.
34அப்பொழுது வறுமை உன்மீது வழிப்பறிக் கள்வனைப்போலப் பாயும்; ஏழ்மை நிலை உன்னைப் போர் வீரனைப் போலத் தாக்கும்.

24:33-34 நீமொ 6:10-11.