1மன்னவன் மனம் ஆண்டவரின் கைக்குள் அடங்கியிருக்கிறது; வாய்க்கால் நீரைப்போல அவர் அதைத் தம் விருப்பப்படி திருப்பி விடுகிறார்.

2மனிதருடைய நடத்தையெல்லாம் அவர் பார்வையில் குற்றமற்றதாய்த் தோன்றலாம். ஆனால், ஆண்டவர் அவர் உள்ளெண்ணத்தைச் சீர்தூக்கிப் பார்க்கிறார்.

3பலிசெலுத்துவதைவிட நேர்மையாகவும் நியாயமாகவும் நடப்பதே ஆண்டவருக்கு உவப் பளிக்கும்.

4மேட்டிமையான பார்வை, இறுமாப்புக் கொண்ட உள்ளம் — இவை பொல்லாரிடம் பளிச்சென்று காணப்படும் பாவங்கள்.

5திட்டமிட்டு ஊக்கத்துடன் உழைப்பவரிடம் செல்வம் சேரும் என்பது திண்ணம்; பதற் றத்துடன் வேலைசெய்பவர் பற்றாக்குறையில் இருப்பார்.

6ஒருவர் பொய் பேசிச் சேர்க்கும் பொருள், காற்றாய்ப் பறந்துவிடும்; அவரது உயிரையும் அது வாங்கி விடும்.

7பொல்லார் நேர்மையானதைச் செய்ய மறுப்பதால், அவர்களது கொடுமை அவர்களையே வாரிக் கொண்டுபோகும்.

8குற்றம் செய்பவர் வழி கோணலானது; குற்றமற்றவர் செய்கை நேர்மையானது.

9மாடி வீட்டில் நச்சரிக்கும் மனைவியோடு வாழ்வதைவிட, குடிசை வாழ்க்கையே மேல்.

10பொல்லார் மனம் தீமை செய்வதில் நாட்டங்கொள்ளும்; தமக்கு அடுத்திருப்பாரை அவர்கள் கனிவுடன் பார்ப்பதும் இல்லை.

11ஏளனம் செய்வோரை அடிக்கும்போது அதைக் காணும் பேதையராவது படிப்பினை பெறுவர்; உணர்வுள்ளவருக்கு அறிவு புகட்டும் போது அவர் மேலும் அறிவுடையவராவார்.

12நீதிமிகு இறைவன் பொல்லாருடைய வீட்டைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்; அவர்களைத் தீச்செயல் காரணமாகத் தூக்கி எறிந்து அழித்துவிடுகிறார்.

13ஏழை கூக்குரலிடும்போது எவன் காதைப் பொத்திக்கொள்கிறானோ, அவன் தானே உதவிக் காக மன்றாடும்போது எவரும் அவனுக்குச் செவி கொடுக்கமாட்டார்.

14மறைவாக நன்கொடை கொடுத்து சினத்தைத் தணிப்பார்கள்; மடியில் கைக்கூலி திணித்துச் சீற்றத்தை ஆற்றுவார்கள்.

15நீதி நிலைநாட்டுவது நேர்மையானவருக்கு மகிழ்ச்சியளிக்கும்; தீமை செய்வோருக்கோ அது திகிலுண்டாக்கும்.

16விவேகம் காட்டும் வழியை விட்டு விலகிச் செல்பவர், செத்தாரிடையே தங்க விரைபவர்.

17ஒய்யாரமான வாழ்க்கையை நாடுகிறவர் ஏழையாவார்; மதுவையும் நறுமணப் பொருள் களையும் விரும்புகிறவர் செல்வராகமாட்டார்.

18நல்லவருக்குப் பொல்லாங்கு செய்யப் பார்ப்பவர் தாமே அவருக்குப் பதிலாள் ஆகிவிடு வார்; நேர்மையானவரை வஞ்சிக்கப் பார்ப்பவர் அவருக்குப் பதிலாகத் தாமே வஞ்சனைக்கு ஆளாவார்.

19நச்சரிப்பவளும் சிடுசிடுப்பவளுமான மனைவியுடன் வாழ்வதைவிட, பாலை நிலத்தில் தனியே வாழ்வதே மேல்.

20ஞானமுள்ளவர் வீட்டில் செல்வமும் அரும்பொருள்களும் இருக்கும்; மதிகேடர் தம் செல்வத்தைக் கரைத்துவிடுவார்.

21நேர்மையையும் இரக்கத்தையும் கடைப் பிடித்து நடப்பவர், நீடித்து வாழ்வார், மேன்மையும் அடைவார்.

22வீரர் நிறைந்த பட்டணத்தையும் நல்வாழ் வையும் ஞானமுள்ளவர் கைப்பற்றுவார்; அவர்கள் நம்பியிருந்த அரணையும் இடித்துத் தள்ளுவார்.

23தம் வாயையும் நாவையும் காப்பவர், இடுக்கண் வராமல் தம்மைக் காத்துக்கொள்வார்.

24ஏளனம் செய்யும் செருக்குடையோரின் பெயர் இறுமாப்பு; அளவு கடந்த பெருமையுடன் நடப்பதே அவர் போக்கு.

25சோம்பேறியின் அவா அவரைக் கொல் லும்; ஏனெனில், அவர் கைகள் வேலை செய்ய மறுக்கின்றன.

26அவர் நாள் முழுதும் பிறர் பொருளுக்காக ஏக்கங்கொண்டிருப்பார்; ஆனால் சான்றோர் தம் பொருளை இல்லையென்னாது வழங்குவர்.

27பொல்லார் செலுத்தும் பலி அருவருக்கத் தக்கது; தீய நோக்கத்தோடு அவர்கள் செலுத்தும் பலி இன்னும் அருவருக்கத்தக்கதன்றோ?

28பொய்ச்சான்று கூறுபவன் கெட்டழிவான்; உன்னிப்பாய்க் கேட்பவன் பேச்சோ என்றைக் கும் ஏற்புடையதாகும்.

29பொல்லார் முகத்தில் போலி வீரம் காணப் படும்; நேர்மையானவர் தம் நடத்தை சீரானது என்னும் உறுதியுடனிருப்பார்.

30ஆண்டவரின் எதிரில் நிற்கக் கூடிய ஞானமுமில்லை, விவேகமுமில்லை, அறிவுரையு மில்லை.

31போர் நாளுக்கென்று குதிரையை ஆயத்தமாக வைத்திருக்கலாம்; ஆனால் வெற்றி கிடைப்பது ஆண்டவராலேயே.