1கனிவான மறுமொழி கடுஞ்சினத் தையும் ஆற்றிவிடும்; கடுஞ்சொல்லோ சினத்தை எழுப்பும்..

2ஞானமுள்ளவர்களின் நா அறிவை வழங்கும்; மதிகேடரின் வாயோ மடமையை வெளியிடும்.

3ஆண்டவருடைய கண்கள் எங்கும் நோக்கும்; நல்லாரையும் பார்க்கும், பொல்லா ரையும் பார்க்கும்.

4சாந்தப்படுத்தும் சொல், வாழ்வளிக்கும் மரம் போன்றது; வஞ்சகப் பேச்சாலோ மனமுடைந்துபோகும்.

5தன் தந்தையின் நல்லுரையைப் புறக்கணிப்பவர் மூடர்; கண்டிப்புரையை ஏற்பவர் விவேகமுள்ளவர்.

6நல்லாரின் வீட்டில் நிறைசெல்வம் நிலைத்திருக்கும்; பொல்லாரின் வருவாயால் விளைவது தொல்லையே.

7ஞானிகளின் பேச்சு அறிவை வளர்க்கும் தன்மையது; மதிகேடரின் உள்ளம் அத் தகையதல்ல.

8பொல்லார் செலுத்தும் பலி ஆண்டவருக்கு அருவருப்பைத் தரும்; நேர்மையானவர்களின் மன்றாட்டு அவருக்கு உகந்ததாயிருக்கும்.

9பொல்லாரின் செயல்கள் ஆண்டவருக்கு அருவருப்பு; நீதியைப் பின்பற்றுவோரிடம் அவர் அன்புகொள்கிறார்.

10நெறி தவறிச் செல்பவருக்குத் தண்டனை கடுமையாயிருக்கும்; கண்டிப்பை வெறுப்பவர் மரணம் அடைவார்.

11பாதாளமும் படுகுழியுமே ஆண்டவர் பார்வையில் இருக்க, மனிதரின் உள்ளம் அவர் பார்வைக்கு மறைவாயிருக்குமா?

12ஏளனம் செய்வோர் தம்மைக் கடிந்து கொள்பவரை விரும்பார்; ஞானமுள்ளவரிடம் செல்லவும் மாட்டார்;

13அகமகிழ்ச்சியால் முகம் மலரும்; மனத் துயரால் உள்ளம் உடையும்.

14விவேகமுள்ளவர் மனம் அறிவை நாடும்; மதிகேடர் வாய்க்கு மடமையே உணவு.

15ஒடுக்கப்பட்டோருக்கு ஒவ்வொரு நாளும் தொல்லை நாளே; மனமகிழ்ச்சி உள்ளவருக்கோ எல்லா நாள்களும் விருந்து நாள்களே.

16பெருஞ்செல்வமும் அதனோடு கவ லையும் இருப்பதைவிட, சிறுதொகையும் அதனோடு ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமும் இருப்பதே மேல்.

17பகை நெஞ்சம் கொண்டோர் படைக்கும் நல்ல இறைச்சி உணவைவிட, அன்புள்ளம் உடையவர் அளிக்கும் மரக்கறி உணவே மேல்.

18எளிதில் சினங்கொள்பவர் சண்டையை மூட்டுவார்; பொறுமை உடையவர் சண்டையைத் தீர்த்து வைப்பார்.

19சோம்பேறிக்கு எவ்வழியும் முள் நிறைந்த வழியே; சுறுசுறுப்பானவர்கள் செல்லும் பாதையோ நெடுஞ்சாலையாகும்.

20ஞானமுள்ள மகன் தன் தந்தையை மகிழ்விப்பான்; அறிவற்ற மகனோ தன் தாயை இகழ்வான்.

21மூடன் தன் மடமை குறித்து மகிழ்ச்சி யடைகின்றான்; மெய்யறிவுள்ளவன் நேர்மை யானதைச் செய்வான்.

22எண்ணிப் பாராமல் செய்யும் செயல் தோல்வியடையும்; பலர் திட்டமிட்டுச் செய்யும் செயல் வெற்றியடையும்.

23தக்க மறுமொழி அளிப்பவன் மிக்க மகிழ்ச்சி அடைவான்; காலமும் வேளையும் அறிந்து சொல்லும் சொல்லால் வரும் மகிழ்ச்சி இன்னும் பெரிது.

24விவேகமுள்ளவன் செல்லும் பாதை பாதாளத்திற்குச் செல்லும் பாதை அல்ல; அது வாழ்விற்குச் செல்லும் பாதையாகும்.

25இறுமாப்புள்ளவர் வீட்டை ஆண்டவர் இடித்துத் தள்ளுவார்; கைம்பெண்ணினது நிலத்தின் எல்லைகளைப் பாதுகாப்பார்.

26தீயோரின் எண்ணங்களை ஆண்டவர் அருவருக்கிறார்; மாசற்றோரின் சொற்களே உவப்பளிப்பவை.

27வன்முறையில் செல்வம் சேர்ப்பவர் தம் குடும்பத்திற்குத் தொல்லை வருவிப்பார்; கைக்கூலி வாங்க மறுப்பவர் நீடித்து வாழ்வார்.

28சான்றோர் எண்ணிப் பார்த்து மறுமொழி கூறுவர்; பொல்லாரின் வாய் தீய சொற்களைப் பொழியும்.

29ஆண்டவர் பொல்லாருக்கு நெடுந் தொலையில் இருக்கிறார்; தமக்கு அஞ்சி நடப்போரின் மன்றாட்டுக்குச் செவிசாய்க்கிறார்.

30இன்முகம் மனத்திற்கு மகிழ்ச்சி தரும்; நல்ல செய்தி உடம்புக்கு உரமளிக்கும்.

31நலம் தரும் அறிவுரையைக் கவனமாகக் கேட்பவர், ஞானிகளோடு உறவு கொண்டி ருப்பதை விரும்புவார்.

32கண்டிக்கப்படுவதைப் புறக்கணிக்கிறவர் தமக்கே கேடு வருவித்துக் கொள்கிறார்; அறிவுரையைக் கவனமாகக் கேட்பவர் உணர்வை அடைவார்.

33ஆண்டவரிடம் அச்சம்கொள்ளுதல் ஞானத்தைத் தரும் பயிற்சி; மேன்மை அடையத் தாழ்மையே வழி.