‛நீதிமொழிகள்’ என்னும் இந்நூல் ஒழுக்கத்தையும் சமயத்தையும் சார்ந்த போதனைகளின் தொகுப்பாகும். இவை சொற்கோவை, பழமொழி ஆகிய வடிவங்களில் காணப்படுகின்றன. இவற்றுள் பெரும்பாலானவை அன்றாட வாழ்வையும் நடைமுறை வழக்கையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன.

இந்நூல் ‘ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்’ எனத் தொடங்கி, சமய ஒழுக்கம் பற்றியும் நல்லறிவு, நன்னடத்தை ஆகியவை பற்றியும் விளக்கிக் கூறுகின்றது. இங்குக் காணப்படும் சொற்கோவைகள் பண்டைய இஸ்ரயேலின் ஞானிகளுடைய அனுபவமிக்க அறிவுரைகளாக அமைந்துள்ளன. மேலும் குடும்ப உறவுகள், பொருளீட்டு முயற்சிகள், சமூக உறவுகள், நன்னடத்தை, தற்கட்டுப்பாடு ஆகிய முறைமைகள் பற்றியும், மனத்தாழ்வு, பொறுமை, ஏழையர்பால் அன்பு, மாறாத நட்பு ஆகிய பண்புகளை பற்றியும் இந்நூல் விரித்துரைக்கின்றது.

நூலின் பகுதிகள்

  1. ஞானம் பற்றிய புகழுரை 1:1 - 9:18
  2. சாலமோனின் நீதிமொழிகள் 10:1 - 29:27
  3. ஆகூரின் மொழிகள் 30:1 - 33
  4. பல்வேறு சொற்கோவைகள் 31:1 - 31