கால்நடைகள் சாவு

1மீண்டும் ஆண்டவர் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: “நீ பார்வோனிடம் சென்று அவனிடம் சொல்; எபிரேயரின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: எனக்கு வழிபாடு செலுத்துவதற்காக என் மக்களைப் போகவிடு!
2நீ அவர்களைப் போகவிடாமல் இன்னும் தடைசெய்தால்,
3நாட்டிலுள்ள குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், எருதுகள், ஆடுகள் ஆகிய உன் கால்நடைகள் மேல் கடவுளின் கைவன்மை மிகக்கொடிய கொள்ளை நோயாக வரப்போகிறது.
4ஆண்டவரும், இஸ்ரயேலரின் கால்நடைகளுக்கும், எகிப்தியரின் கால்நடைகளுக்கும் இடையே வேறுபாடு காட்டுவார். எனவே, இஸ்ரயேல் மக்களுக்குரியவை அனைத்திலும் எவையுமே மடிந்துபோகா.
5‘நாளையதினமே ஆண்டவர் இதனை இந்நாட்டில் செயல்படுத்தப்போகிறார்’ என்று ஆண்டவரே ஒரு நேரத்தையும் குறித்துவிட்டார்.”
6அதன்படி எகிப்தியரின் கால்நடைகளெல்லாம் மடிந்தன. இஸ்ரயேல் மக்களின் கால்நடைகளிலோ எதுவும் சாகவில்லை.
7பார்வோன் ஆளனுப்பி விசாரித்தான். இஸ்ரயேலரின் கால்நடைகளில் ஒன்றுகூடச் சாகவில்லை. ஆயினும் பார்வோனின் மனம் கடினப்பட்டது. மக்களை அவன் போகவிடவில்லை.

கொப்புளங்கள்

8மேலும், ஆண்டவர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி, “அடுப்பிலிருந்து சாம்பலை உங்கள் கைகள் நிறைய வாரிக் கொள்ளுங்கள். பார்வோன் முன்னிலையில் மோசே அதனை வானத்தில் தூவட்டும்.
9எகிப்து நாடெங்கும் அது மெல்லிய தூசியாகப் பரவி மனிதர் மேலும் விலங்குகள் மேலும் கொப்புளங்களாகி வெடித்துப் புண்ணாகும்” என்றார்.
10அவர்களும் அடுப்பிலிருந்து சாம்பலை வாரிக்கொண்டு பார்வோன் முன்னிலையில் சென்று நின்றனர். மோசே வானத்தில் அதனைத் தூவினார். மனிதர் மேலும் விலங்குகள்மேலும் அது வெடித்துப் புண்ணாகக்கூடிய கொப்புளங்களாக மாறிற்று.
11கொப்புளம் தோன்றியதால் மந்திரவாதிகள் மோசேயின் முன் நிற்க இயலவில்லை. ஏனெனில், மந்திரவாதிகள் மேலும் எல்லா எகிப்தியர்மேலும் கொப்புளம் கண்டிருந்தது.
12ஆண்டவர் பார்வோனின் மனத்தைக் கடினப்படுத்தினார். ஆண்டவர் மோசேக்கு அறிவித்தபடியே அவர்களுக்கு அவன் செவிசாய்க்கவில்லை.

கல்மழை

13மீண்டும் ஆண்டவர் மோசேயிடம் பின்வருமாறு கூறினார்: அதிகாலையில் எழுந்து பார்வோன் முன்னிலையில் வந்துநின்று அவனை நோக்கிச் சொல்; எபிரேயரின் கடவுளான ஆண்டவர் சொல்வது இதுவே. எனக்கு வழிபாடு செய்வதற்காக என் மக்களைப் போகவிடு.
14இல்லையெனில் இம்முறை கொள்ளைநோய்களை எல்லாம் உன்மேலும் உன் அலுவலர்மேலும் உன் குடிமக்கள்மேலும் நானே ஏவி விடுவேன். இந்நாடெங்கும் எனக்கு நிகர் யாருமே இல்லை என்பதை இதனால் நீ அறிந்து கொள்வாய்.
15கையை ஓங்கி, உன்னையும் உன் குடிமக்களையும் கொள்ளை நோய்களால் இதற்குள் தாக்கியிருப்பேன். நீயும் இந்நாட்டிலிருந்து ஒழிந்து போயிருப்பாய்.
16எனினும், என் வல்லமையைக் காட்டவும் என் பெயரை நாடெங்கும் அறிக்கையிடவுமே நான் உன்னை நிலைக்கச் செய்தேன்.
17நீயோ, என் மக்களைப் போகவிடாத அளவுக்கு இன்னும் தலைதூக்கி நிற்கின்றாய்.
18எகிப்து நிறுவப்பட்டது தொடங்கி இன்றுவரை அங்கே இருந்திராத அளவுக்கு மிகக் கொடிய கல்மழையை அதில் நாளையதினம் இந்நேரத்தில் பெய்யச் செய்வேன்.
19எனவே, உன் கால்நடைகளையும் வயல் வெளியில் உனக்குரிய எல்லாவற்றையும் பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் புகச்செய்ய இப்போதே ஆளனுப்பிவிடு! வீட்டிற்குக் கொண்டு சேர்க்கப்படாமல் வயல்வெளியில் விடப்பட்ட மனிதர் அனைவர் மேலும் விலங்குகள் அனைத்தின் மேலும் கல்மழை பெய்ய, எல்லோரும் மடிவர்.
20பார்வோனின் அலுவலரில் ஆண்டவரின் வார்த்தையை மதித்தவர் தம் அடிமைகளையும், தம் கால்நடைகளையும் வீடுகளுக்குள் ஓட்டிவிட்டனர்.
21ஆண்டவர் வார்த்தையை மதிக்காதவர் தங்கள் அடிமைகளையும் கால்நடைகளையும் வயல்வெளியில் விட்டுவிட்டனர்.
22ஆண்டவர் மோசேயை நோக்கி, “எகிப்து நாடெங்கும் - எகிப்து நாட்டிலுள்ள மனிதர், விலங்கு, வயல்வெளியிலுள்ள பயிர்பச்சை இவற்றின் மேல் - கல்மழை பொழியுமாறு உன்கையை வானோக்கி நீட்டு” என்றார்.
23மோசே தம்கோலை வானோக்கி நீட்டவே, ஆண்டவர் இடி முழக்கங்களையும், கல்மழையையும் அனுப்பினார். நிலத்தில் நெருப்பு பாய்ந்து வந்தது. எகிப்து நாடெங்கும் கல்மழை பெய்வித்தார் ஆண்டவர்.
24கல்மழை பெய்தது. ஒரு நாடாக எகிப்து உருவான காலந்தொடங்கி அந்நாள்வரை அங்கு இருந்திராத அளவு மிகக் கடுமையான கல்மழை பெய்ய அதனிடையே மின்னல் வெட்டிக் கொண்டிருந்தது.
25எகிப்து நாடு முழுவதிலும் மனிதர் முதல் விலங்கு வரை வயல்வெளியில் இருந்த அனைத்தையும் கல்மழை தாக்கியது; மேலும் வயல்வெளியில் பயிர்பச்சை யாவற்றையும் பாழ்படுத்தியது; வயல்வெளி மரங்கள் அனைத்தையும் முறித்தெறிந்தது.
26இஸ்ரயேல் மக்கள் தங்கியிருந்த கோசேன் நிலப்பகுதியில் மட்டும் கல்மழை பெய்யவில்லை.
27பார்வோன் ஆளனுப்பி மோசேயையும் ஆரோனையும் கூப்பிட்டான். அவன் அவர்களை நோக்கி, “நான் இம்முறை பாவம் செய்துவிட்டேன். ஆண்டவரே நீதியுள்ளவர். நானும் என் மக்களுமே தீயவர்.
28எனவே, ஆண்டவரிடம் மன்றாடுங்கள். இடிமுழக்கங்களையும் கல்மழையையும் கடவுள் அனுப்பியது போதும்; நான் உங்களைப் போக விடுவேன். இனிமேல் நீங்கள் தங்கவே வேண்டாம்” என்றான்.
29மோசே அவனை நோக்கி, “நாளைக்கு வெளியே போனபின், நான் என் கைகளை ஆண்டவரை நோக்கி எழுப்புவேன். இடிமுழக்கங்கள் ஓய்ந்து போகும். கல்மழையும் நின்றுவிடும். இதனால் இந்நாடு ஆண்டவருடையது என்பதை நீர் அறிந்து கொள்வீர்.
30ஆனால், உம்மையும் உம் அலுவலரையும் பொறுத்தமட்டில், இன்னும் நீங்கள் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் அஞ்சிநடப்பதாகவே இல்லை என்பது எனக்குத் தெரியும்” என்றார்.
31அப்போது சணல் பயிரும், வாற்கோதுமைப் பயிரும் அடிபட்டுப் போயின. வாற்கோதுமை கதிர்விட்டிருந்தது. சணல் பூத்து இருந்தது.
32ஆனால் கோதுமையும், மாக்கோதுமையும் அடிபட்டுப் போகவில்லை; ஏனெனில், அவை பின்னர் கதிர்விடுவன.
33மோசே பார்வோனை விட்டகன்று நகருக்கு வெளியே வந்தார். தம் கைகளை ஆண்டவர்பால் நீட்டினார். உடனே இடிமுழக்கங்களும் கல்மழையும் ஓய்ந்தன. நாட்டில் மழை பெய்வதும் நின்றது.
34மழையும் கல்மழையும் இடிமுழக்கங்களும் ஓய்ந்து போனதைக் கண்டான் பார்வோன். ஆயினும், அவன் மேலும் தொடர்ந்து பாவம் செய்தான்; தன் மனத்தைக் கடினப்படுத்திக் கொண்டான். அவனைப் போலவே அவனது அலுவலரும் நடந்து கொண்டனர்.
35பார்வோனின் மனம் இறுகிவிட்டதால், மோசே வழியாய் ஆண்டவர் அறிவித்தபடியே அவன் இஸ்ரயேல் மக்களைப் போகவிடவில்லை.

9:10 திவெ 16:2. 9:16 உரோ 9:17. 9:24 திவெ 8:7; 16:21.