எரிபலிபீடம் செய்தல்
(விப 27:1-8)

1சித்திம் மரத்தால் அவர் ஓர் எரிபலிபீடம் செய்தார். அது நீளம் ஐந்து முழமும் அகலம் ஐந்து முழமுமாகச் சதுரவடிவமாயிருந்தது. அதன் உயரமோ மூன்று முழம்.
2அதன் நான்கு மூலைகளிலும் அவர் கொம்புகளை அமைத்தார்; கொம்புகள் அதனோடு ஒன்றிணைந்திருந்தன; அதை வெண்கலத்தால் மூடினார்.
3அவர் பலிபீடத்தின் துணைக்கலன்கள் அனைத்தையும் செய்தார்; சாம்பல் சட்டிகள், அள்ளு கருவிகள், பலிக்கிண்ணங்கள், முள்கரண்டிகள், நெருப்புத் தட்டுகள் ஆகிய எல்லாக் கலன்களையும் வெண்கலத்தில் செய்தார்.
4பலிபீடத்தைச்சுற்றி வலைப்பின்னலான வெண்கல வேலைப்பாடு செய்து அதன் பாதிப்பகுதியை எட்டும்படி அதன் விளிம்புகளுக்குக்கீழே அவர் பொருத்தினார்.
5தண்டுகளைத் தாங்குவதற்காக நான்கு வளையங்களை வார்த்து அதன் வெண்கல வலைப்பின்னலின் நான்கு மூலைகளிலும் அவர் பொருத்தினார்.
6அவர் சித்திம் மரத்தால் தண்டுகள் செய்து வெண்கலத்தால் மூடினார்.
7பலிபீடத்தைத் தூக்கிச் செல்வதற்காக அதன் இரு பக்கங்களிலும் தண்டுகளை வளையங்களில் அவர் செலுத்தினார். பலகைகளைச் சேர்த்து உள்கூடாக அமைத்தார்.

வெண்கல நீர்த்தொட்டி செய்தல்
(விப 30:18)

8சந்திப்புக் கூடார நுழைவாயிலில் பணியாற்றும் பெண்கள் கொண்டு வந்த வெண்கலக் கண்ணாடிகளைக் கொண்டு அவர் வெண்கல நீர்த்தொட்டியையும், அதன் வெண்கல ஆதாரத்தையும் செய்தார்.

கூடார முற்றம் செய்தல்
(விப 27:9-19)

9அவர் முற்றத்தை உருவாக்கினார்; தெற்குப்பக்கம், தென்திசை நோக்கிய முற்றத்திலுள்ள தொங்குதிரைகள் முறுக்கேற்றி நெய்த நார்ப்பட்டால் ஆனவை; நூறு முழம் நீண்டவை.
10அவற்றிற்கான இருபது தூண்களும் இருபது பாதப்பொருத்துகளும் வெண்கலத்தால் ஆனவை. தூண்களுக்கான கொக்கிகளும் பூண்களுமோ வெள்ளியாலானவை.
11அவ்வாறே வட பக்கத்திலும் தொங்குதிரைகள் நூறு முழம் நீண்டவை. அதற்கான இருபது தூண்களும், இருபது பாதப்பொருத்துகளும் வெண்கலத்தால் ஆனவை. தூண்களுக்கான கொக்கிகளும் பூண்களுமோ வெள்ளியாலானவை.
12மேற்குப் பக்கத்தில் ஐம்பது முழத் தொங்குதிரைகள் இருந்தன. அவற்றிற்காகப் பத்துத் தூண்கள் பத்துப் பாதப்பொருத்துகள் இருந்தன. தூண்களுக்கான கொக்கிகளும் பூண்களும் வெள்ளியாலானவை.
13கதிரவன் தோன்றும் கீழ்த்திசை நோக்கி ஐம்பது முழத் தொங்குதிரைகள் இருந்தன.
14அதன் ஒரு பகுதியில் பதினைந்து முழத் தொங்குதிரைகள், மூன்று தூண்கள், மூன்று பாதப்பொருத்துகள் அமைந்தன.
15இதுபோன்றே, முற்றத்தின் நுழைவாயிலுக்கு மறுபகுதியிலும் பதினைந்து முழத் தொங்குதிரைகள், மூன்று தூண்கள், மூன்று பாதப்பொருத்துகள் அமைந்தன.
16முற்றத்தைச் சுற்றியுள்ள எல்லாத் தொங்குதிரைகளும் முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டால் ஆனவை.
17தூண்களின் பாதப் பொருத்துக்கள் வெண்கலத்தால் ஆனவை. தூண்களின் கொக்கிகளும் பூண்களுமோ வெள்ளியாலானவை. அவற்றின் பொதிகைகள் வெள்ளியால் பொதியப்பட்டவை. முற்றத்தின் தூண்கள் அனைத்துமே வெள்ளிப் பூண்கள் கொண்டிருந்தன.
18முற்றத்து நுழைவாயிலின் தொங்குதிரை நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நூலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டும், பின்னல் வேலைப்பாடும் கொண்டதாக விளங்கியது. அதன் நீளம் இருபது முழம்; அதன் அகலமும் உயரமும் முற்றத்தின் தொங்கு திரைகளுக்கு இணையாக ஐந்து முழமாம்.
19அதற்காக நான்கு தூண்களுக்கும் நான்கு வெண்கல பாதப்பொருத்துகள் இருந்தன. அவற்றின் கொக்கிகளும், பொதிகைகளும், பூண்களும் வெள்ளியால் மூடப்பட்டிருந்தன.
20திருஉறைவிடத்திலும் சுற்று முற்றத்திலுள்ள முளைகள் எல்லாம் வெண்கலத்தால் ஆனவை.

கூடாரத்திற்குப் பயன்பட்ட பொருள்கள்

21திருஉறைவிடத்தின் அதாவது உடன்படிக்கைத் திருஉறைவிடத்தின் இருப்புக் கணக்கில் இருந்தவை இவையே; மோசேயின் கட்டளைப்படி குரு ஆரோனின் மகன் இத்தாமரின் பொறுப்பில், லேவியர் எடுத்த கணக்கு பின்வருமாறு;
22யூதா குலத்தைச் சார்ந்த கூரின் மகன் ஊரியின் புதல்வரான பெட்சலேல் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டது அனைத்தையும் செய்தார்.
23அவரோடு இருந்தவர் தாண் குலத்தைச் சார்ந்த அகிசமாக்கின் மகன் ஒகொலியாபு. அவர் ஒரு சிற்பியும் கலைஞரும் ஆவார். நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலையும் முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டையும் பின்னித் தயாரிப்பதில் வல்லுநராக இருந்தார்.
24தூயகத்தின் அனைத்துப் பணிக்கும் பயன்பட்ட தங்கமெல்லாம் ஆரத்திக் காணிக்கைவழி வந்தது. அது தூயகச் செக்கேல் நிறைப்படி ஆயிரத்து நூற்றெழுபது கிலோ கிராம்* ஆகும்.
25மக்கள் கூட்டமைப்பில் எண்ணப்பட்டவர்களிடமிருந்து வந்த வெள்ளி தூயகச் செக்கேல் நிறைப்படி நாலாயிரத்து இருபது கிலோ கிராம்* ஆகும்.
26இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள ஆண்கள் எண்ணப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் கொடுக்க வேண்டியது தலைக்கு ஆறு கிராம்* அதாவது தூயகச் செக்கேல் நிறைப்படி அரைச் செக்கேல். இத்தகைய ஆண்கள் ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேர் இருந்தனர்.
27தூயகத்திலுள்ள பாதப் பொருத்துகளையும், திருத்தூயகத்திரைக்கான பாதப்பொருத்துகளையும் வார்க்க, நாலாயிரம் கிலோ கிராம்* வெள்ளியாயிற்று. ஒரு பாதப்பொருத்துக்கு நாற்பது கிலோ கிராமாக நூறு பாதப்பொருத்துகளுக்கு நாலாயிரம் கிலோ கிராம் ஆயிற்று.
28அதிலிருந்து இருபது கிலோ கிராம்*எடுத்து, அவர் தூண்களுக்கான கொக்கிகள் செய்தார்; பொதிகைகளைப் பொதிந்தார்; அவற்றிற்குப் பூண்கள் அமைத்தார்.
29ஆரத்திக் காணிக்கையாக வந்த வெண்கலம் இரண்டாயிரத்து எண்ணூற்று இருபத்து ஐந்து கிலோ கிராம்* ஆகும்.
30அதைக்கொண்டு அவர் சந்திப்புக் கூடார நுழைவாயிலின் பாதப்பொருத்துகளையும், வெண்கலப் பலிபீடத்தையும், அதன் வெண்கல வலைப்பின்னலையும், பலிபீடத்திற்கான அனைத்துத் துணைக்கலன்களையும் செய்தார்.
31மேலும், முற்றத்தைச் சுற்றியுள்ள பாதப்பொருத்துகள், முற்றத்தின் நுழைவாயிலிலுள்ள பாதப்பொருத்துகள், திருஉறைவிடத்தின் முளைகள், முற்றத்தைச் சுற்றியுள்ள முளைகள் ஆகிய அனைத்தையும் செய்தார்.

38:25-26 விப 30:11-16. 38:26 மத் 17:24.
38:24 ‘இருபத்தொன்பது தாலந்தும் எழுநூற்று முப்பது செக்கேலும்’ என்பது எபிரேய பாடம். 38:25 ‘நூறு தாலந்தும் ஆயிரத்து எழுநூற்று எழுபத்தைந்து செக்கேலும்’ என்பது எபிரேய பாடம். 38:26 ‘பெக்கா’ என்பது எபிரேய பாடம். 38:27 ‘நூறு தாலந்து’ என்பது எபிரேய பாடம். 38:28 ‘ஆயிரத்து எழுநூற்று எழுபத்தைந்து செக்கேல்’ என்பது எபிரேய பாடம். 38:29 ‘எழுபது தாலந்தும் இரண்டாயிரத்து நானூறு செக்கேலும்’ என்பது எபிரேய பாடம்.