இறைவனின் மாட்சியும் மானிடரின் மேன்மையும்
(பாடகர் தலைவர்க்கு: ‘காத்து’ நகர்ப் பண்; தாவீதின் புகழ்ப்பா)

1ஆண்டவரே! எங்கள் தலைவரே!

உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு
மேன்மையாய் விளங்குகின்றது!

உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும்

உயர்ந்துள்ளது.

2பாலகரின் மழலையிலும்

குழந்தைகளின் மொழியிலும்

வலிமையை உறுதிப்படுத்தி

உம் பகைவரை ஒடுக்கினீர்;

எதிரியையும் பழிவாங்குவோரையும்

அடக்கினீர்.

3உமது கைவேலைப்பாடாகிய

வானத்தையும்

அதில் நீர் பொருத்தியுள்ள

நிலாவையும் விண்மீன்களையும்

நான் நோக்கும்போது,

4மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு

அவர்கள் யார்?

மனிதப் பிறவிகளை

நீர் ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு

அவர்கள் எம்மாத்திரம்?

5ஆயினும், அவர்களைக்

கடவுளாகிய* உமக்குச்

சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்;

மாட்சியையும் மேன்மையையும்

அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.

6உமது கை படைத்தவற்றை

அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்;

எல்லாவற்றையும்

அவர்கள் பாதங்களுக்குக்

கீழ்ப்படுத்தியுள்ளீர்.

7ஆடுமாடுகள், எல்லா வகையான

காட்டு விலங்குகள்,

8வானத்துப் பறவைகள்,

கடல் மீன்கள்,

ஆழ்கடலில் நீந்திச் செல்லும்

உயிரினங்கள் அனைத்தையும்

அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர்.

9ஆண்டவரே, எங்கள் தலைவரே,

உமது பெயர் உலகெங்கும்

எவ்வளவு மேன்மையாய்

விளங்குகின்றது!


8:2 மத் 21:16. 8:4 யோபு 7:17-18; திபா 144:3; எபி 2:6-8. 8:6 1 கொரி 15:27; எபே 1:22; எபி 2:8.
8:5 ‘வானதூதர்க்கு’ என்றும் மொழிபெயர்க்கலாம்.