உதவிக்காக மன்றாடல்
(தாவீதுக்கு உரியது)

1ஆண்டவரே, உம்மை நோக்கி

மன்றாடுகின்றேன்;

என் கற்பாறையே, என் குரலைக்

கேளாதவர்போல் இராதேயும்;

நீர் மௌனமாய் இருப்பீராகில்,

படுகுழியில் இறங்குவோருள்

நானும் ஒருவனாகிவிடுவேன்.

2நான் உம்மிடம் உதவி வேண்டுகையில்,

உமது திருத்தூயகத்தை நோக்கி

நான் கையுயர்த்தி வேண்டுகையில்,

பதில் அளித்தருளும்.

3பொல்லாரோடு என்னை

ஒழித்து விடாதேயும்!

தீயவரோடு என்னை அழித்து விடாதேயும்!

அவர்கள் தமக்கு அடுத்திருப்பாரோடு

பேசுவதோ சமாதானம்;

அவர்களது உள்ளத்தில் உள்ளதோ

நயவஞ்சகம்.

4அவர்களின் செய்கைக்கேற்ப,

அவர்களின் தீச்செயலுக்கேற்ப,

அவர்களுக்குத் தண்டனை அளியும்;

அவர்கள் கைகள் செய்த

தீவினைகளுக்கேற்ப, அவர்களுக்குத்

தண்டனை வழங்கியருளும்,

அவர்களுக்குத் தகுந்த

கைம்மாறு அளித்தருளும்.

5ஏனெனில், ஆண்டவரின் செயல்களையோ

அவர் கைகள் உருவாக்கியவற்றையோ

அவர்கள் மதிக்கவில்லை;

ஆகையால் அவர் அவர்களைத்
தகர்த்தெறிவார்;

ஒருபோதும் மீண்டும் கட்டி எழுப்பார்.

6ஆண்டவர் போற்றி! போற்றி!

ஏனெனில், அவர் என்

கெஞ்சும் குரலுக்குச் செவிசாய்த்தார்.

7ஆண்டவர் என் வலிமை, என் கேடயம்;

அவரை என் உள்ளம் நம்புகின்றது;

நான் உதவி பெற்றேன்; ஆகையால்

என் உள்ளம் களிகூர்கின்றது;

நான் இன்னிசைபாடி

அவருக்கு நன்றி கூறுவேன்.

8ஆண்டவர் தாமே தம் மக்களின் வலிமை;

தாம் திருப்பொழிவு செய்தவர்க்கு

அவரே பாதுகாப்பான அரண்.

9ஆண்டவரே, உம் மக்களுக்கு

விடுதலை அளித்தருளும்;

உமது உரிமைச் சொத்தான அவர்களுக்கு

ஆசி வழங்கும்;

அவர்களுக்கு ஆயராக இருந்து

என்றென்றும் அவர்களைத்

தாங்கிக்கொள்ளும்.


28:4 திவெ 22:12.