நீதிக்காக வேண்டல்

1ஆண்டவரே, ஏன் தொலைவில்

நிற்கின்றீர்?

தொல்லைமிகு நேரங்களில்

ஏன் மறைந்துகொள்கின்றீர்?

2பொல்லார் தம் இறுமாப்பினால்

எளியோரைக் கொடுமைப்படுத்துகின்றனர்;

அவர்கள் வகுத்த சதித்திட்டங்களில்

அவர்களே அகப்பட்டுக் கொள்வார்களாக.

3பொல்லார் தம் தீய நாட்டங்களில்

தற்பெருமை கொள்கின்றனர்;

பேராசையுடையோர் ஆண்டவரைப்

பழித்துப் புறக்கணிக்கின்றனர்.

4பொல்லார் செருக்கு உள்ளவராதலால்

அவரைத் தேடார்;

அவர்கள் எண்ணமெல்லாம்

‛கடவுள் இல்லை!

5எம் வழிகள் என்றும் நிலைக்கும்’ என்பதே.

உம் தீர்ப்புகளோ மிக மேலானவை;

அவர்களின் அறிவுக்கு எட்டாதவை.

தம் பகைவர் அனைவரையும் பார்த்து

அவர்கள் நகைக்கின்றனர்.

6‛எவராலும் என்னை அசைக்க முடியாது;

எந்தத் தலைமுறையிலும்

எனக்குக் கேடு வராது’ என்று

அவர்கள் தமக்குள் சொல்லிக்கொள்வர்.

7அவர்களது வாய் சாபமும் கபடும்

கொடுமையும் நிறைந்தது;

அவர்களது நாவினடியில்

கேடும் தீங்கும் இருக்கின்றன.

8ஊர்களில் அவர்கள் ஒளிந்து

காத்திருக்கின்றனர்;

சூதறியாதவர்களை மறைவான இடங்களில்

கொலை செய்கின்றனர்;

திக்கற்றவர்களைப் பிடிப்பதிலேயே

அவர்கள் கண்ணாயிருக்கின்றனர்.

9குகையிலிருக்கும் சிங்கம்போல் அவர்கள்

மறைவில் பதுங்கியிருக்கின்றனர்;

எளியோரைப் பிடிப்பதற்காகவே

அவர்கள் பதுங்கியிருக்கின்றனர்;

தம் வலையில் சிக்கவைத்து

இழுத்துச் செல்கின்றனர்.

10அவர்கள் எளியோரை

நலிவுறச் செய்து நசுக்குகின்றனர்;

அவர்களது கொடிய வலிமையால்

ஏழைகள் வீழ்த்தப்படுகின்றனர்.

11‛இறைவன் மறந்துவிட்டார்;

தம் முகத்தை மூடிக்கொண்டார்;

என்றுமே எம்மைப் பார்க்க மாட்டார்’ என்று

பொல்லார் தமக்குள்

சொல்லிக் கொள்கின்றனர்.

12ஆண்டவரே, எழுந்தருளும்!
இறைவா, எமது ஆற்றலை வெளிப்படுத்தும்!

எளியோரை மறந்துவிடாதேயும்.

13பொல்லார் கடவுளைப் புறக்கணிப்பது ஏன்?

அவர் தம்மை விசாரணை

செய்யமாட்டாரென்று அவர்கள்

தமக்குள் சொல்லிக்கொள்வது ஏன்?

14ஆனால், உண்மையில் நீர் கவனிக்கின்றீர்;

கேட்டையும் துயரத்தையும் பார்த்து,

உதவி செய்யக் காத்திருக்கின்றீர்;

திக்கற்றவர் தம்மை

உம்மிடம் ஒப்படைக்கின்றனர்;

அனாதைக்கு நீரே துணை.

15பொல்லார் மற்றும் தீயோர் கைகளை

முறித்துவிடும்; அவர்களது

பொல்லாங்கைத் தேடிக் கண்டுபிடித்து,

அது அற்றுப்போகச் செய்யும்.

16ஆண்டவர் என்றுமுள அரசர்;

அவரது நிலத்தினின்று

வேற்றினத்தார் அகன்று விடுவர்.

17ஆண்டவரே, எளியோரின் விருப்பத்தை

நீர் நிறைவேற்றுகின்றீர்;

அவர்கள் உள்ளத்திற்கு ஊக்கம் அளித்து

அவர்களுக்குச் செவிசாய்க்கின்றீர்.

18நீர் அனாதைகளுக்கும்

ஒடுக்கப்படுகிறவர்களுக்கும்

நீதி வழங்குகின்றீர்;

மண்ணினின்று தோன்றிய மனிதர்

இனியும் அவர்களைத் துன்புறுத்த மாட்டார்.


10:7 உரோ 3:14.