கடவுளின் மாறாத நீதி

1அதற்குச் சூகாயனான பில்தாது

கூறிய பதில்:

2எதுவரை இவ்வாறே பேசிக் கொண்டிருப்பீர்?

உம் வாய்ச்சொற்கள்

புயல்காற்றைப் போல் இருக்கின்றன.

3இறைவனே நீதியைப் புரட்டுவாரா?

எல்லாம் வல்லவரே நேர்மை பிறழ்வாரா?

4உம் புதல்வர்கள் அவருக்கெதிராயப்

பாவம் செய்ததால், குற்றப்பழியின்

ஆற்றலிடம் அவர்களைக் கையளித்தார்.

5ஆனால், நீர் இறைவனை

ஆர்வத்துடன் நாடினால்,

எல்லாம் வல்லவரிடம் இறைஞ்சினால்,

6நீர் மாசற்றவரும் நேர்மையானவருமாய்

இருந்தால் இப்பொழுது கூட

அவர் உம்பொருட்டு எழுந்திடுவார்,

உமக்குரிய உறையுளை மீண்டும் ஈந்திடுவார்.

7உம்முடைய தொடக்கம்

எளிமையாக இருப்பினும்,

உம் வருங்காலம் வளமைமிகக் கொழிக்கும்.

8முன்னோரின் தலைமுறையைக்

கேட்டுப்பாரும்;

அன்னாரின் தந்தையர் ஆய்ந்ததை அறியும்.

9நேற்றுத் தோன்றிய நாம் ஒன்றும் அறியோம்;

நிலமிசை நம் வாழ்நாள் நிழலைப் போன்றது,

10அவர்களன்றோ உமக்கு

அறிவித்து உணர்த்துவர்!

புரிந்த வார்த்தைகளை

உமக்குப் புகட்டுவர்!

11சேறின்றி நாணல் தழைக்குமா?

நீரின்றிக் கோரை வளருமா?

12இன்னும் பசுமையாக வெட்டாது இருக்கையிலே

எல்லாப் புற்களுக்கு முன்னே அவை வாடிடும்.

13இறைவனை மறப்போரின் கதி இதுவே;

இறைப்பற்றில்லாரின் நம்பிக்கை இடிந்துபோம்;

14அவர்களின் நம்பிக்கை முறிந்துபோம்;

அவர்கள் சார்ந்திருப்பது சிலந்திக் கூட்டையே.

15யாராவது அவ்வீட்டின்மீது சாய்ந்தால்,

அது நில்லாதுபோம்; யாராவது அதைப்

பற்றி பிடித்தால், அது நிலைத்திராது.

16பகலவன்முன் பசுஞ்செடி போன்றோர் அவர்கள்;

படரும் தோட்டமெங்கும்

அவர்களின் கிளைகள்.

17கற்குவியலில் பின்னிடும் அவர்களின் வேர்கள்

கற்களிடையே இடம் தேடும்.

18அவர்கள் தம் இடத்திலிருந்து எடுபட்டால்,

‘உங்களை நான் கண்டதேயில்லை’ என

உதறிவிடும் அவ்விடம்.

19பார்! அவர்கள் தம் வாழ்வில்

கண்ட இன்பம் இதுவே:

மண்ணினின்று மற்றவர் முளைத்தெழுவர்.

20இதோ! கறையிலாதவரை

இறைவன் கைவிடுவதில்லை;

காதகர்க்கு அவர் கைகொடுப்பதுமில்லை.

21இருப்பினும், உம் வாயைச் சிரிப்பாலும்,

இதழ்களை மகிழ்வொலியாலும் நிரப்புவார்.

22உம்மைப் பகைப்பவ‌ர்

வெட்கத்தால் உடுத்தப்படுவர்;

தீயோர் கூடாரம் இல்லாது போகும்.