யோபினுடைய துன்பங்களின் உட்பொருள்

1எலிகூ தொடர்ந்து பேசலானான்:

2சற்றுப் பொறும்;

காட்டுவேன் உமக்கு கடவுள் சார்பாய்

நான் கூற வேண்டியவற்றை.

3தொலையிலிருந்து

என் அறிவைக் கொணர்வேன்;

எனை உண்டாக்கியவர்க்கு

நேர்மையை உரித்தாக்குவேன்.

4ஏனெனில், மெய்யாகவே

பொய்யன்று என் சொற்கள்;

அறிவுநிறைந்த நான் உம் நடுவே உள்ளேன்.

5இதோ! இறைவன் வல்லவர்;

எவரையும் புறக்கணியார்;

அவர் வல்லமையும் ஞானமும் கொண்டவர்.

6கொடியவரை அவர் வாழவிடார்;

ஒடுக்கப்படுவோர்க்கு உரிமையை வழங்குவார்;

7நேர்மையாளர்மீது கொண்ட

பார்வையை அகற்றார்;

அரசர்களை அரியணையில் அமர்த்துகின்றார்;

என்றென்றும் அவர்கள் ஏற்றமடைவர்.

8ஆனால் அவர்கள்

சங்கிலியால் கட்டுண்டாரெனில்,

வேதனையின் கயிற்றில் அகப்பட்டாரெனில்,

9அவர்கள் செய்ததையும் மீறியதையும்,

இறுமாப்புடன் நடந்ததையும்

எடுத்து இயம்புவார்.

10அறிவுரைகளுக்கு

அவர்கள் செவியைத் திறப்பார்;

தீச்செயலிலிருந்து திரும்புமாறு

ஆணையிடுவார்.

11அவர்கள் கேட்டு, அவர்க்குப் பணி புரிந்தால்,

வளமாய்த் தங்கள் நாள்களையும்

இன்பமாய்த் தங்கள் ஆண்டுகளையும் கழிப்பர்.

12செவிகொடுக்காவிடில் வாளால் மடிவர்.

அறிவின்றி அவர்கள் அழிந்துபோவர்.

13தீயமனத்தோர் வெஞ்சினம் வளர்ப்பர்;

அவர்களை அவர் கட்டிப்போடுகையில்

உதவிக்காகக் கதறமாட்டார்.

14அவர்கள் இளமையில் மடிவர்;

காமுகரோடு அவர்கள் வாழ்வு முடியும்.

15துன்புற்றோரைத் துன்பத்தால் காப்பார்;

வேதனையால் அவர்கள் காதைத் திறப்பார்.

16இடுக்கண் வாயினின்று

உங்களை இழுத்துக் காத்தார்;

ஒடுக்கமற்ற பரந்த வெளியில் சேர்த்தார்.

உங்கள் பந்தியை ஊட்டமுள உணவால் நிரப்பினார்.

17பொல்லார்க்குரிய தீர்ப்பு உங்கள்மீது வந்தது;

தீர்ப்பும் நீதியும் உங்களைப் பற்றிப் பிடித்தன.

18வளமையால் வழிபிறழாமல்

பார்த்துக்கொள்ளும்;

நிறைந்த கையூட்டால் நெறிதவறாதேயும்.

19உம் நிறைந்த செல்வமும்

வல்லமையின் முழு ஆற்றலும்

இன்னலில் உமக்கு உதவுமா?

20இருந்த இடத்திலேயே மக்கள் மடியும்

இரவுக்காக ஏங்காதீர்.

21துன்பத்தைவிட தீச்செயலையே

நீர் தேர்ந்துகொண்டீர்; எனவே

அதற்குத் திரும்பாதபடி எச்சரிக்கையாயிரும்.

கடவுளின் ஆற்றலுக்குப் புகழ்ப்பாடல்

22இதோ! ஆற்றலில் இறைவன் உயர்ந்தவர்;

அவருக்கு நிகரான ஆசிரியர் உளரோ?

23அவர் நெறியை அவர்க்கு வகுத்தவர் யார்?

அவர்க்கு ‘நீர் வழிதவறினிர்” எனச்

சொல்ல வல்லவர் யார்?

24அவர் செயலைப் புகழ்வதில் கருத்தாயிரும்.

மாந்தர் அதனைப் பாடிப்போயினர்.

25மனித இனம் முழுவதும் அதைக் கண்டது;

மனிதன் தொலையிலிருந்தே

அதை நோக்குவான்.

26இதோ! இறைவன் பெருமை மிக்கவர்;

நம் அறிவுக்கு அப்பாற்பட்டவர்;

அவர்தம் ஆண்டுகள் எண்ணற்றவை;

கணக்கிட முடியாதவை.

27நீர்த்துளிகளை அவர்

ஆவியாக இழுக்கின்றார்; அவற்றை

மழையாக வடித்துக் கொடுக்கின்றார்.

28முகில்கள் அவற்றைப் பொழிகின்றன;

மாந்தர்மேல் அவற்றை

மிகுதியாகப் பெய்கின்றன.

29பரவும் முகில்களையும்

அவர்தம் மணிப்பந்தலின்

ஆர்ப்பரிப்பினையும் ஆய்ந்தறிபவர் யார்?

30இதோ! தம்மைச் சுற்றி

மின்னல் ஒளிரச் செய்கின்றார்.

கடலின் அடித்தளத்தை மூடுகின்றார்.

31இவற்றால், மக்களினங்கள்மீது

தீர்ப்பளிக்கின்றார்;

அதிகமாய் உணவினை அளிக்கின்றார்.

32மின்னலைத் தம் கைக்குள் வைக்கின்றார்;

இலக்கினைத் தாக்க ஆணை இடுகின்றார்.

33இடிமுழக்கம் அவரைப்பற்றி எடுத்துரைக்கும்;

புயல் காற்று அவர் சீற்றத்தைப் புகலும்.