எலிகூவின் இரண்டாம் சொற்பொழிவு
(32:1- 37:24)

1எலிகூ தொடர்ந்து கூறினான்:

2ஞானிகளே!

என் சொற்களைக் கேளுங்கள்;

அறிஞர்களே! எனக்குச் செவிகொடுங்கள்.

3நாக்கு உணவைச் சுவைத்து அறிவதுபோல,

காது சொற்களைப் பகுத்துணர்கின்றது.

4நேர்மை எதுவோ அதை நமக்கு

நாமே தேர்ந்துகொள்வோம்;

நல்லது எதுவோ அதை

நமக்குள்ளேயே முடிவு செய்வோம்.

5ஆனால் யோபு சொல்லியுள்ளார்;

“நான் நேர்மையானவன்; ஆனால்

இறைவன் என் உரிமையைப்

பறித்துக் கொண்டார்,

6நான் நேர்மையாக இருந்தும்

என்னைப் பொய்யனாக்கினார்;

நான் குற்றமில்லாதிருந்தும்

என் புண் ஆறாததாயிற்று.’

7யோபைப் போன்று இருக்கும் மனிதர் யார்?

நீர்குடிப்பதுபோல்

அவர் இறைவனை இகழ்கின்றார்;

8தீங்கு செய்வாரோடு தோழமை கொள்கின்றார்;

கொடியவருடன் கூடிப் பழகுகின்றார்.

9ஏனெனில், அவர் சொல்லியுள்ளார்;

‘கடவுளுக்கு இனியவராய் நடப்பதானால்

எந்த மனிதருக்கும் எப்பயனுமில்லை.’

10ஆகையால், அறிந்துணரும்

உள்ளம் உடையவர்களே! செவிகொடுங்கள்!

தீங்கிழைப்பது இறைவனுக்கும்,

தவறு செய்வது எல்லாம் வல்லவருக்கும்

தொலைவாய் இருப்பதாக!

11ஏனெனில், ஒருவரின் செயலுக்கேற்ப

அவர் கைம்மாறு செய்கின்றார்;

அவரது நடத்தைக்கேற்ப நிகழச்செய்கின்றார்.

12உண்மையாகவே, கொடுமையை

இறைவன் செய்யமாட்டார்;

நீதியை எல்லாம் வல்லவர் புரட்டமாட்டார்.

13பூவுலகை அவர் பொறுப்பில் விட்டவர் யார்?

உலகனைத்தையும் அவரிடம்

ஒப்படைத்தவர் யார்?

14அவர்தம் ஆவியைத்

தம்மிடமே எடுத்துக்கொள்வதாக இருந்தால்,

தம் உயிர் மூச்சை

மீண்டும் பெற்றுக் கொள்வதாய் இருந்தால்,

15ஊனுடம்பு எல்லாம் ஒருங்கே ஒழியும்;

மனிதர் மீண்டும் மண்ணுக்குத் திரும்புவர்;

16உமக்கு அறிவிருந்தால் இதைக் கேளும்;

என் சொற்களின் ஒலிக்குச் செவிகொடும்.

17உண்மையில், நீதியை வெறுப்பவரால்

ஆட்சி செய்ய இயலுமா?

வாய்மையும் வல்லமையும் உடையவரை

நீர் பழிப்பீரோ?

18அவர் வேந்தனை நோக்கி

“வீணன்” என்றும்

கோமகனைப் பார்த்து ‘கொடியோன்’

என்றும் கூறுவார்.

19அவர் ஆளுநனை ஒருதலைச்சார்பாய்

நடத்த மாட்டார்; ஏழைகளை விடச்

செல்வரை உயர்வாய்க் கருதவுமாட்டார்;

ஏனெனில், அவர்கள் அனைவரும்

அவர் கைவேலைப்பாடுகள் அல்லவா?

20நொடிப்பொழுதில் அவர்கள் மடிவர்;

நள்ளிரவில் நடுக்கமுற்று அழிவர்;

ஆற்றல் மிக்காரும்

மனித உதவியின்றி அகற்றப்படுவர்.

21ஏனெனில், அவரின் விழிகள்

மனிதரின் வழிகள்மேல் உள்ளன;

அவர்களின் அடிச்சுவடுகளை

அவர் காண்கிறார்.

22கொடுமை புரிவோர்

தங்களை ஒளித்துக்கொள்ள

இருளும் இல்லை; இறப்பின் நிழலும் இல்லை.

23இறைவன்முன் சென்று கணக்குக் கொடுக்க,

எவருக்கும் அவர் நேரம் குறிக்கவில்லை.

24வலியோரை நொறுக்குவதற்கு அவர்

ஆய்ந்தறிவு செய்யத்தேவையில்லை,

அன்னார் இடத்தில் பிறரை அமர்த்துவார்.

25அவர்களின் செயலை அவர் அறிவார்;

ஆதலால் இரவில் அவர்களை வீழ்த்துவார்;

அவர்களும் நொறுக்கப்படுவர்.

26அவர்கள் கொடுஞ்செயலுக்காக அவர்

மக்கள் கண்முன் அவர்களை வீழ்த்துவார்.

27ஏனெனில், அவரைப் பின்பற்றாமல்

அவர்கள் விலகினர்;

அவர்தம் நெறியனைத்தையும்

அவர்கள் பொருட்படுத்தவில்லை;

28ஏழையின் குரல் அவருக்கு எட்டச் செய்தனர்;

அவரும் ஒடுக்கப்பட்டவர் குரலைக் கேட்டார்.

29அவர் பேசாதிருந்தால்,

யார் அவரைக் குறைகூற முடியும்?

அவர் தம் முகத்தை மறைத்துக் கொண்டால்,

யார்தான் அவரைக் காணமுடியும்?

நாட்டையும் தனி மனிதரையும்

அவரே கண்காணிக்கின்றார்.

30எனவே, இறைப்பற்றில்லாதவரோ

மக்களைக் கொடுமைப் படுத்துபவரோ

ஆளக்கூடாது.

31எவராவது இறைவனிடம்

இவ்வாறு கேட்பதுண்டா;

‘நான் தண்டனை பெற்றுக் கொண்டேன்;

இனி நான் தவறு செய்யமாட்டேன்.

32தெரியாமல் செய்ததை

எனக்குத் தெளிவாக்கும்;

தீங்கு செய்திருந்தாலும்,

இனி அதை நான் செய்யேன்.’

33நீர் உம் தவற்றை உணர மறுக்கும்போது,

கடவுள் உம் கருத்துக்கேற்ப

கைம்மாறு வழங்கவேண்டுமா?

நீர் தான் இதைத் தீர்மானிக்க வேண்டும்;

நான் அல்ல; ஆகையால்

உமக்குத் தெரிந்ததைக் கூறும்.

34புரிந்துகொள்ளும் திறன் உடையவரும்

எனக்குச் செவி சாய்ப்பவர்களில்

ஞானம் உள்ளவரும் இவ்வாறு சொல்வர்;

35யோபு புரியாமல் பேசுகின்றார்;

அவர் சொற்களும் பொருளற்றவை.

36யோபு இறுதிவரை சோதிக்கப்படவேண்டுமா?

ஏனெனில், அவரின் மொழிகள்

தீயோருடையவைபோல் உள்ளன.

37யோபு தாம் பாவம் செய்ததோடு

கிளர்ச்சியும் செய்கின்றார்;

ஏளனமாய் நம்மிடையே அவர்

கை தட்டுகின்றார்; இறைவனுக்கு எதிராக

வார்த்தைகளைக் கொட்டுகின்றார்.


34:3 யோபு 12:11. 34:11 திபா 62:12.