1அப்பொழுது எலிசா, “ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். ஆண்டவர் கூறுவது இதுவே: நாளை இந்நேரம் சமாரிய நகர வாயிலில் ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு வெள்ளிக் காசுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு வெள்ளிக் காசுக்கும் விற்கப்படும்” என்றார்.
2அரசனுக்குப் பக்கபலமாயிருந்த அதிகாரி கடவுளின் அடியவரை நோக்கி, “இதோ பாரும்! ஆண்டவர் வானின் கதவுகளைத் திறந்து விட்டாலும் இத்தகைய காரியம் நடக்குமா?” என்று கேட்டான். அதற்கு அவர், “இதை நீ உன் கண்களால் காண்பாய். ஆனால், அதில் நீ எதையும் உண்ணமாட்டாய்” என்றார்.

சிரியாவின் படை தப்பியோடுதல்

3நகர வாயிலின் அருகே நான்கு தொழுநோயாளிகள் இருந்தனர். இவர்கள் ஒருவர் ஒருவரிடம், “சாவை எதிர்நோக்கி, நாம் ஏன் இங்கு உட்கார்ந்து இருக்க வேண்டும்? நாம் நகருக்குள் செல்வோமாயின், நகரில் பஞ்சம் இருப்பதால், நாம் செத்துப் போவோம்.
4இங்கேயே தங்கி இருந்தாலும் சாக வேண்டியதுதான். வாருங்கள்! சிரியாவின் பாசறைக்குச் சென்று தஞ்சம் புகுவோம். அவர்கள் நம்மை வாழவிட்டால், நாம் உயிர் பிழைப்போம். அவர்கள் நம்மைக் கொன்றுபோட்டால் செத்துப்போவோம்” என்று பேசிக் கொண்டனர்.
5இருள் கவிழ்ந்த வேளையில் அவர்கள் சிரியரின் பாசறையின் எல்லையை நெருங்கியபோது, அங்கே ஒருவரும் இல்லை.
6ஏனெனில், தேர்கள், குதிரைகள், பெரும் படை ஆகியவற்றின் பேரொலியை சிரியாப் படையினர் கேட்கும்படி ‘தலைவர்’ செய்திருந்தார். எனவே, அவர்கள் ஒருவர் ஒருவரை நோக்கி, “இதோ! இஸ்ரயேல் அரசன் தனக்குத் துணையாக இத்திய அரசர்களையும் எகிப்திய அரசர்களையும் கூலிக்கு அமர்த்திக் கொண்டு நம்மைத் தாக்க வருகிறான்” என்று சொல்லிக்கொண்டனர்.
7எனவே, அவர்கள் இருள் கவிழ்ந்த வேளையில் ஓட்டம்பிடித்தனர். தங்கள் கூடாரங்களையும், கழுதைகளையும், பாசறையையும் அப்படியே விட்டுவிட்டு உயிருக்காகத் தப்பி ஓடினர்.
8ஆகவே, இந்தத் தொழுநோயாளிகள் பாசறையின் எல்லையை நெருங்கி, ஒரு கூடாரத்தின் உள்ளே நுழைந்து அங்கே உண்டு குடித்தனர். மேலும், அங்கிருந்த வெள்ளி, பொன், ஆடைகள் முதலியவற்றை எடுத்துக்கொண்டுபோய் ஒளித்து வைத்தனர். மீண்டும் திரும்பி வந்து வேறொரு கூடாரத்தில் புகுந்து அங்கிருந்தவற்றை எடுத்துக்கொண்டுபோய் ஒளித்துவைத்தனர்.
9பிறகு, அவர்கள் ஒருவர் ஒருவரிடம், “இன்று நாம் இப்படிச் செய்வது சரியன்று. இந்நாள் நல்ல செய்தியின் நாள். நாளைக் காலை வரை இதை வெளியிடாது மௌனமாய் இருந்தால், நாம் குற்றவாளிகள் ஆவோம். வாருங்கள்! நாம் போய் அரச மாளிகையில் இதை அறிவிப்போம்” என்று சொல்லிக்கொண்டனர்.
10அவர்கள் சென்று நகர வாயிற் காவலனை அணுகி, “நாங்கள் சிரியரின் பாசறைக்குள் சென்றோம். அங்கு யாரையும் காணவில்லை. அங்குக் கட்டியிருந்த குதிரைகளும் கழுதைகளும், கூடாரங்களும் அப்படியே இருந்தன” என்று தெரிவித்தனர்.
11வாயிற் காவலர் இதை உரத்த குரலில் சொல்ல, அது உள்ளே அரச மாளிகைக்குத் தெரிவிக்கப்பட்டது.
12அரசன் இரவிலேயே எழுந்து தன் பணியாளரை நோக்கி, “சிரியர் நமக்கு எதிராகச் செய்துள்ளதைக் கேளுங்கள்; நாம் பட்டினியால் வருந்துவதை அறிந்து, அவர்கள் தங்கள் பாசறையை விட்டு வெளியேறி, ‘இஸ்ரயேலர் நகரிலிருந்து வெளியேறுவார் அப்பொழுது நாம் அவர்களை உயிரோடு பிடித்துக்கொண்டு நகரினுள் நுழையலாம்’ என்று எண்ணி வயல்வெளிகளில் ஒளிந்திருக்கின்றனர்” என்றான்.
13அவனுடைய பணியாளருள் ஒருவன், “இங்கே எஞ்சியுள்ள குதிரைகளுள் ஐந்தினைச் சிலர் ஓட்டிக்கொண்டு செல்லட்டும். இங்கே எஞ்சியுள்ள இஸ்ரயேலர் அனைவருக்கும் நேரிடுவதை அவர்களுக்கும் நேரிடட்டும். ஆம்; ஏற்கெனவே அழிவுக்குள்ளான இஸ்ரயேலர் அனைவரையும்போல் இவர்களும் அழிவுக்கு உள்ளாவர். எனவே, அவர்களை அனுப்பிப் பார்ப்போம்” என்றான்.
14அவ்வாறே, இரண்டு குதிரைத் தேர்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் அரசன் சிலரைச் சிரியர் பாசறைக்கு அனுப்பி, “சென்று பாருங்கள்” என்று கட்டளையிட்டான்.
15அவர்களோ சிரியரைத் தேடி யோர்தான்வரை போனார்கள். இதோ! சிரியர் தப்பிஓடிய வேகத்தில் விட்டெறிந்த ஆடைகளும் படைக்கலன்களும் சிதறிக் கிடந்தன. அத்தூதர்கள் அரசனிடம் திரும்பிவந்து அதைத் தெரிவித்தனர்.
16உடனே மக்கள் புறப்பட்டுச் சென்று சிரியர் பாசறையைக் கொள்ளையடித்தனர். இவ்வாறு, ஆண்டவரின் வாக்கின்படி ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு வெள்ளிக்காசுக்கும் இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு வெள்ளிக் காசுக்கும் விற்கப்பட்டன.
17அரசன் தனக்குப் பக்க பலமாயிருந்த அதிகாரியிடம், நகர்வாயிலின் காவல் பொறுப்பை ஒப்படைத்திருந்தான். மக்கள் நகர்வாயிலில் அவனை மிதித்துப் போடவே, அவன் இறந்து போனான். இவ்வாறு, கடவுளின் அடியவர் தம்மிடம் வந்த அரசனுக்கு அறிவித்தபடியே நடந்தது.
18இங்ஙனம், “நாளை இந்நேரம் சமாரிய நகர வாயிலில் இரண்டு மரக்கால் வாற்கோதுமை, ஒரு வெள்ளிக் காசுக்கும், ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு வெள்ளிக் காசுக்கும் விற்கப்படும்” என்று கடவுளின் அடியவர் அரசனிடம் கூறியிருந்த வாக்கு நிறைவேறியது.
19ஏனெனில், அந்த அதிகாரி கடவுளின் அடியவரை நோக்கி, “இதோ பாரும்! ஆண்டவர் வானின் கதவுகளைத் திறந்துவிட்டாலும் இத்தகைய காரியம் நடக்குமா?” என்று கேட்டிருந்தான். அதற்கு அவர், “இதை நீ உன் கண்களால் காண்பாய். ஆனால், அதில் எதையும் நீ உண்ணமாட்டாய்” என்று கூறியிருந்தார்.
20அவ்வாறே, அவனுக்கு நேரிட்டது. மக்கள் அவனை நகர வாயிலில் மிதித்துப்போட அவனும் இறந்து போனான்.