Tamil Catholic Holy Bible online

:: இன்றைய வாசகங்கள்

Today`s readings - Fr.Amirtharasa Sundar

17ஆம் வாரம் செவ்வாய் இரண்டாம் ஆண்டு முதல் வாசகம் நீர் எங்களோடு செய்த உடன்படிக்கையை நினைவுகூரும்; அதனை முறித்துவிடாதீர். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 14: 17-22 ஆண்டவர் எரேமியாவுக்குக் கூறியது: நீ அவர்களுக்கு இந்த வாக்கைக் கூறு: என் கண்கள் இரவு பகலாகக் கண்ணீர் சொரியட்டும்; இடைவிடாது சொரியட்டும்; ஏனெனில் என் மக்களாம் கன்னி மகள் நொறுங்குண்டாள்; அவளது காயம் மிகப் பெரிது. வயல்வெளிகளுக்குச் சென்றால், இதோ! வாளால் மடிந்தவர்கள்! நகரில் நுழைந்தால், இதோ! பசியால் நலிந்தவர்கள்! இறைவாக்கினரும் குருக்களும் தங்களுக்கு முன்பின் தெரியாத நாட்டில் அலைகின்றனர். நீர் யூதாவை முற்றிலும் புறக்கணித்துவிட்டீரா? சீயோனை உம் உள்ளம் வெறுத்துவிட்டதா? நாங்கள் குணமாக முடியாதபடி ஏன் எங்களை நொறுக்கினீர்? நாங்கள் அமைதிக்காகக் காத்திருந்தோம்; பயனேதும் இல்லை! நலம் பெறும் காலத்தை எதிர்பார்த்திருந்தோம்; பேரச்சமே மிஞ்சியது! ஆண்டவரே! எங்கள் குற்றத்தையும் எங்கள் மூதாதையரின் தீமையையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்; நாங்கள் உமக்கு எதிராய்ப் பாவம் செய்தோம். உம் பெயரை முன்னிட்டு எங்களை உதறித் தள்ளாதீர்; உம் மாட்சிமிகு அரியணையை அவமதிக்காதீர்; நீர் எங்களோடு செய்த உடன்படிக்கையை நினைவுகூரும்; அதனை முறித்துவிடாதீர். வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளுள் மழை தரவல்லது எதுவும் உண்டா? வானங்கள் தாமாக மழை பொழிய முடியுமா? எங்கள் இறைவனாகிய ஆண்டவரே, நீர் அல்லவா அதைச் செய்யக்கூடியவர்; நாங்கள் உம்மையே எதிர்நோக்கியுள்ளோம்; ஏனெனில், இவற்றை எல்லாம் செய்பவர் நீரே. இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.   பதிலுரைப் பாடல் திபா 79: 8. 9. 11,13 (பல்லவி: 9உ) பல்லவி: ஆண்டவரே, எங்கள் பாவங்களை மன்னித்தருளும். 8 எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்! உம் இரக்கம் எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப் பட்டிருக்கின்றோம். பல்லவி 9 எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும்; உமது பெயரை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும்; எங்கள் பாவங்களை மன்னித்தருளும். பல்லவி 11 சிறைப்பட்டோரின் பெருமூச்சு உம் திருமுன் வருவதாக! கொலைத் தீர்ப்புப் பெற்றோரை உம் புயவலிமை காப்பதாக. 13 அப்பொழுது உம் மக்களும், உமது மேய்ச்சலின் மந்தையுமான நாங்கள் என்றென்றும் உம்மைப் போற்றிடுவோம்! தலைமுறைதோறும் உமது புகழை எடுத்துரைப்போம். பல்லவி   நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி அல்லேலூயா, அல்லேலூயா! இறைவனின் வார்த்தையே விதையாம், அதை விதைப்பவர் கிறிஸ்துவே; அவரைக் கண்டடைபவர் எல்லாம் என்றென்றும் நிலைத்திருப்பர். அல்லேலூயா.   நற்செய்தி வாசகம் எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும். மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 36-43 அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவரருகே வந்து, ``வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்\'\' என்றனர். அதற்கு அவர் பின்வருமாறு கூறினார்: ``நல்ல விதைகளை விதைப்பவர் மானிட மகன்; வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்; அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின் முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர். எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும். மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறி கெட்டோரையும் ஒன்றுசேர்ப்பார்கள்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளி வீசுவர். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.\'\' இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.   சிந்தனை நேர்மையாளர்கள் என்றும் வாழ்வார்கள் என்ற நம்பிக்கையை தருகின்றது. அவர் படைத்தவர் நேர்மையாய் நடந்து கொள்வது போல நாமுமு; நேர்மையாய் நடந்து கொள்ள அழைக்கப்படுக்கின்றோம். உலகினரின் எண்ணம் வேறு கடவுளின் எண்ணம் வேறு. படைத்தவர் என்றுமே வாக்கு மாறாதவர். நேர்மையாளருக்குரிய கைம்மாறு தந்து அவர்களை தன் பக்கம் ஏற்றுக் கொள்வார்.


மறையுரை சிந்தனை

Breaking the WORD daily - Fr. Theo SDB


RSS widget

உங்கள் மின்னஞ்சலை பதியவும்

Subscribe to Arulvakku Group E-mails

Type your email here
Find us on